×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடலோர கிராமங்களுக்கு தேவை கருவாடு உலர்தளம்: தரையில் பிறந்து தண்ணீரில் பிழைக்கும் மீனவர்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடலோர கிராமங்களில், கருவாடு உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் மங்கலம் அடுத்த மோர்பண்னை ஒரு மீனவர் கிராமமாகும்.

இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள திருப்பாலைக்குடி தொண்டி, நம்புதாளை, சோளியக்குடி, புதுப்பட்டிணம், முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டிணம், முனிவீரன்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நாட்டுப்படகுகளில் இரவில் சென்று மறுநாள் காலை வீடு திரும்புதல் அல்லது பகலில் சென்று இரவில் வீடு திருப்புகின்றனர்.

மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஐஸ் கட்டி பாக்ஸ்களை கொண்டு சென்று மீன் கெடாமல் பாதுகாத்து கொண்டு வருகின்றனர். இரால், நண்டு, கணவாய் மற்றும் மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர் மீன் கம்பெணிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களை ஏற்றுமதி நிறுவன கம்பெனிகள் நேரடியாகவும், சிறுகம்பெனிகள் மூலமாகவும் கொள்முதல் செய்கின்றன.

மற்ற மீன்களை ஆர்.எஸ்.மங்கலம். திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். விற்பனை செய்தது போக பாக்கியுள்ள மீன்களை உப்பு கலந்து கருவாடாக உலர்த்தி பின்னர் பல்வேறு நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இந்நிலையில், கடலோர கிராமங்களில் மீன்களை உலர்த்தும் உலர்தளம் இல்லாமல் சாலைகளில் உலர்த்துகின்றனர். இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வாங்கி சாப்பிடுபவர்களுக்கும் சுகாதாரமாக இருப்பதில்லை. மோர்பண்ணை கிராமத்தில் ரூ.பல லட்சத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கருவாடு உலர்த்துவதற்கு சர்ரியான உலர்தளம் இல்லை. எனவே, கடலோர கிராமங்களில் மீன் உலர்தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பசுருல் ஹக் கூறுகையில், ‘அரசு சார்பில் மோர்ப்பண்ணை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைத்து கொடுத்துள்ளனர். இதில், மீனவர்கள் கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை கொண்டு வந்து இறக்குவது மற்றும் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகளை பழுது நீக்குதல், புதிய வலைகள் அமைத்தல், ஓய்வு எடுத்தல் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துகின்றனர்.

ஆனால், மீன்களை உலர்த்த உலர்தளம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கடந்த அதிமுக ஆட்சியில் மோர்ப்பண்ணை கிராமத்தில், அமைக்கப்பட்ட கருவாடு உலர்தளம் தற்போது சிதிலமடைந்துவிட்டது. மீன்களை கருவாடாக உலர்த்துவதற்கு இடமில்லாமல், சாலையிலும் நடைபாதையிலும் உலர்த்துகிறோம். திருப்பாலைக்குடியில் மீன் இறங்கு தளம் மற்றும் உலர்தளம் வசதி இல்லாததால், சாலைகளில் மீன்களை உலர்த்துகிறோம். முறையாக மீன்களை சரியாக உலர வைக்காவிடில், அவைகளை கீழே கொட்ட வேண்டும். இதனால், மீனவர்களின் உழைப்பு வீணாகிறது.

எனவே, அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் இறங்கு தளம், மீன் உலர்தளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பாக்ஸ் மீன் மூலம் அந்நியச் செலாவணி மீனவர்கள் கடலில் பிடிக்கும் இரால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன் வகைகளை உள்நாடு மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடலோர கிராமங்களுக்கு தேவை கருவாடு உலர்தளம்: தரையில் பிறந்து தண்ணீரில் பிழைக்கும் மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : R. S. ,Mangalam ,R. S. Mangalam ,Ramanathapuram ,S Mangalam ,Morphan ,Kerawadu ,Dinakaran ,
× RELATED அனைத்து சவால்களையும் முறியடித்து...