×

கேளம்பாக்கம் அருகே வீட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது: 16.5 சவரன் நகை பறிமுதல்

திருப்போரூர்: சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமம், மதுரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர், கேளம்பாக்கத்தில் கைப்பைகள் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடைக்கு சென்றுள்ளார். மாலையில் இருவரும் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 18 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

கேளம்பாக்கம் போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தையூர் கிராமத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை பைக்கில் வந்த ஒரு மர்ம நபர் நோட்டமிடுவதும் அவர் செங்கன்மால் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைக்க முயற்சித்ததும் தெரியவந்தது. செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், அந்த மர்ம நபர் நேற்று மாலை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் ஒரு திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று, நேற்றிரவு படம் முடிந்து வெளியே வந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பு (31) எனத் தெரியவந்தது.

மேலும், இவர் திருவாரூர், கோவையில் 3 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் என்பதும் தெரியவந்தது. கோவை கொள்ளை வழக்கில் அன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து அன்பு வெளியே வந்திருப்பது தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16.5 சவரன் நகைகள், கடப்பாரை, பைக் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கேளம்பாக்கம் அருகே வீட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது: 16.5 சவரன் நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Tirupporur ,Murugan ,Mathura Nagar, Taiyur village ,Kelambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED ஓ.எம்.ஆர். சாலையில் நவீன முறையில்...