×

கூட்டணிக்கு யாரும் முன்வராதநிலையில் ஜே.பி.நட்டா நாளை மறுநாள் சென்னை வருகை

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை மறுநாள் சென்னை வருகிறார். கூட்டணி முடிவாகாதநிலையில் அவர் சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. வரும் வாரங்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆனால், இதுவரை அதிமுகவுடன் எந்த கட்சியும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதே போல கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. பாஜகவும் தனித்து ேபாட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதற்காக ஏற்பாடுகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று கருதும் கூட்டணிக் கட்சியினர் தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, கூட்டணியை இறுதி செய்யும் பணியை தொடங்கி விட்டார். அவர் கூட்டணியில் உள்ள தலைவர்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட கூட்டணியை இறுதி செய்ய மறுத்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். புதிய கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் பொது கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். சென்னை வரும் அவர் முதலாவதாக சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே பாஜக மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

மேலும் தமிழக பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, சமூகவலைதள பிரசார பிரிவு, மகளிர் அணி, இளைஞரணி, சட்டம் பிரிவு உள்பட 38 குழுக்களையும் ஜே.பி.நட்டா சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார். மேலும் பாஜக மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் வியூகம், வழிகாட்டுதல்களையும் மாநில நிர்வாகிகள், சிறப்பு குழுக்களுக்கு அவர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, கூட்டணி குறித்தும் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ஜே.பி.நட்டா பங்கேற்று பேச உள்ளார்.

The post கூட்டணிக்கு யாரும் முன்வராதநிலையில் ஜே.பி.நட்டா நாளை மறுநாள் சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : J. B. Nata ,Chennai ,BJP ,Tamil Nadu ,
× RELATED சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை...