×

மாடியிலிருந்து தவறி விழுந்து 2 வீட்டு சுற்றுச்சுவர் இடுக்கில் சிக்கி தொழிலாளி பரிதாப சாவு

புதுச்சேரி: போதையில் தூங்கிய தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து 2 வீட்டு சுற்றுச்சுவர் இடுக்கில் சிக்கி பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், ஸ்டேட் வங்கி வீதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (38). திருமணமாகாத இவர் பெற்றோர் இல்லாத நிலையில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனிடையே நேற்றிரவு சிவசுப்பிரமணியம் குடித்துவிட்டு வீட்டிக்கு வந்துள்ளார்.

பின்னர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சுற்றுச்சுவர் மீது ஏறி படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த நிலையில் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவருக்கும், இவரது வீட்டின் சுற்றுச்சுவருக்கும் இடையில் சிக்கியுள்ளார். அதன்பிறகு அவரால் மீளமுடியாத நிலையில் உயிருக்கு நீண்டநேரமாக போராடியுள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வராத நிலையில் இடுக்கில் உடம்பு சிக்கி நின்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே இன்று காலை சிவசுப்பிரமணியம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மாடிக்கு வந்தபோது இருவீட்டின் இடிபாடுகளுக்கு இடையே அவர் சிக்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து ஒரு மணிநேரமாக போராடி ஒருவழியாக உடலை மீட்டனர். சிவசுப்பிரமணியம் குடிபோதையில் தவறி விழுந்து இடுக்கில் சிக்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மாடியிலிருந்து தவறி விழுந்து 2 வீட்டு சுற்றுச்சுவர் இடுக்கில் சிக்கி தொழிலாளி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry State Enam Region ,Shivasubramaniam ,State Bank Road ,
× RELATED புதுச்சேரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை