×

காதலை கைவிட்டதால் ஆத்திரம் நடுரோட்டில் வழிமறித்து இளம்பெண்ணை சரமாரி வெட்டிக் கொன்ற வாலிபர்

திருமலை: காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் கானாபூர் நகரில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அலேக்கியா (23). அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (26). இவர்கள் இருவரும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதல் ஜோடிக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீகாந்த்துடன் பேசுவதை அலேக்கியா தவிர்த்து வந்தார்.

ஆனால் ஸ்ரீகாந்த், அலேக்கியாவிடம் பேச பலமுறை முயன்றார். இதை விரும்பாத அலேக்கியா, `இனி, உன்னை காதலிக்கும் எண்ணமும் இல்லை, திருமணம் செய்யும் முடிவும் இல்லை’ எனக்கூறியதோடு, தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அலேக்கியா, தனது அண்ணி ஜீயா (23), அண்ணனின் மகன் ரியான்ஸ் (3) ஆகியோருடன் அங்குள்ள சந்தைக்கு நடந்து சென்றார். இதையறிந்து பின்தொடர்ந்து வந்த ஸ்ரீகாந்த், அலேக்கியாவிடம் பேசி டார்ச்சர் செய்துள்ளார். நடுரோட்டில் தங்களிடம் ரகளை செய்யவேண்டாம் என அலேக்கியாவும், ஜீயாவும் ஸ்ரீகாந்த்தை எச்சரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் அலேக்கியாவை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அலேக்கியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனது கைக்குழந்தையுடன் தடுக்கப்போன ஜீயாவுக்கும் வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் ஸ்ரீகாந்த் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜீயா மற்றும் குழந்தை ரியான்சை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அலேக்கியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பிய ஸ்ரீகாந்தை தேடி வருகின்றனர்.

The post காதலை கைவிட்டதால் ஆத்திரம் நடுரோட்டில் வழிமறித்து இளம்பெண்ணை சரமாரி வெட்டிக் கொன்ற வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Alekia ,Ambedkar town ,Kanapur town, Nirmal district, Telangana ,Srikanth ,
× RELATED ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6...