×

டாஸ்மாக் பார்கள், கடைகளில் பிளாஸ்டிக் சோதனை

*2 கடைகளுக்கு சீல், அபராதம்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் டாஸ்மாக் பார்கள், கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

மேலும் டாஸ்மாக் பார்களிலும் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பதாகவும் மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் தலைமையில் உதவி ஆட்சியர்(பயிற்சி) ரஜத் பீட்டன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார அலுவலர்கள் மாதவன்பிள்ளை, முருகன், பாண்டிராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், சத்யராஜ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் டென்னிசன் சாலை, அவ்வைசண்முகம் சாலை, வடசேரி பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த 3 டாஸ்மாக் பார்களுக்கும் தலா ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் கோட்டார் பகுதியில் 2 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அங்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த இரு கடைகளிலும் 200 கிலோ பிளாஸ்டிக் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இரு கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் கோட்டார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post டாஸ்மாக் பார்கள், கடைகளில் பிளாஸ்டிக் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tasmac bars ,Nagercoil ,Tasmac ,Dinakaran ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்