×

659 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,028 பயனாளிகளுக்கு ₹45.24 கோடி கடனுதவி

*கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில், 659 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,028 பயனாளிகளுக்கு, ரூ.45.24 கோடி மதிப்பிலான கடனுதவியை கலெக்டர் வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் 659 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1,028 பயனாளிகளுக்கு, ரூ.45 கோடியே 24 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் சரயு, பர்கூர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக, ஊரக பகுதிகளில் உள்ள 7,326 குழுக்களில், 95 ஆயிரத்து 238 உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 1,315 குழுக்களில் 18 ஆயிரத்து 410 உறுப்பினர்கள் என மொத்தம் 8641 குழுக்களில் உள்ள ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 648 உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், வேலைவாய்ப்பு முகாம்களில் 5,685 இளைஞர்கள் கலந்து கொண்டதில், 952 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 5 வட்டாரங்களில் செயல்பட்டு வரும் வட்டார வணிக வள மையம் மூலம், 956 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.2.50 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் மூலம், சுகாதாரம், பாலின சமத்துவம், பெண் கல்வி, ஊட்டச்சத்து, நிதிசார் கல்வி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில், 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.5.22 கோடி வங்கி கடன், வங்கி நேரடி கடன் 278 குழுக்களுக்கு ரூ.26.18 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக 128 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் மற்றும் வட்டார வணிக வள மையம் 121 பயனாளிகளுக்கு ரூ.55.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல், நகர்புற பகுதிகளில் 84 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக ரூ.12.01 கோடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் இணை மானியமாக 10 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம், நுண் நிறுவன தொழில் கடனாக 31 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் என மொத்தம் 659 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1,028 பயனாளிகளுக்கு ரூ.45 கோடியே 24 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவிகளை பெற்ற பயனாளிகள், அதை சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் சரயு பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பெரியசாமி, முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பிரபு கிரண், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் வசந்தகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, உதவித் திட்ட அலுவலர்கள் பிரபு, சந்தோசம், தாசில்தார் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் -விற்பனை மேலாளர் யோகலட்சுமி மற்றம் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

The post 659 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,028 பயனாளிகளுக்கு ₹45.24 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Department of Rural Development and Local Government ,Tamil Nadu Women's Development Programme ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்