×

20 ஆண்டுக்கு முன் போடப்பட்ட கரடுமுரடான கல்லூரி சாலை

*புதிதாக அமைக்க மாணவர்கள் கோரிக்கை

பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தேசிய நெடுஞ்சாலை முதல் கல்லூரி வரை 20 ஆண்டு பழமையான சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பரமக்குடி அரசு கலைக்கல்லூரி கடந்த 1996ம் ஆண்டு அரசு சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதிய கட்டிடம் பரமக்குடி ஐடிஐ பின் பகுதியில் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு இதுவரையிலும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் கரடு முரடாக காட்சியளிக்கிறது.

மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில், மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தற்பொழுது பெய்த மழையால் கற்கள் சாலைகளில் சிதறி கிடைக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்லும் மாணவ,மாணவிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பாக நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பணிகளுக்கு வரும் அதிகாரிகளும் அலுவலர்களும் முகம் சுளிக்கும் அளவிற்கு சாலைகள் மோசமடைந்துள்ளது. இது குறித்து முன்னாள் மாணவர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மாணவர்கள் சார்பாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த பருவம் தொடங்குவதற்குள் சாலை அமைக்க விட்டால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கின்றனர். மாணவ,மாணவிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடனடியாக சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 20 ஆண்டுக்கு முன் போடப்பட்ட கரடுமுரடான கல்லூரி சாலை appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Paramakkudy Government Arts College ,Dinakaran ,
× RELATED பரமக்குடியில் லாரி மீது பஸ் மோதி 22 பயணிகள் காயம்