×

பா.ஜ. மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது

*நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேயர் பேச்சு

நாகர்கோவில் : மாநில உரிமைகள் மீது தாக்குதல் நடத்திவரும் ஆளுநர்களை கண்டித்தும், ஒன்றிய பா.ஜ அரசின் பழிவாங்கும் பாசிச அரசியலை கண்டித்தும், மாநிலங்களுக்கு உரிய நிதி பங்கீட்டை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை வடசேரி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் பேசியதாவது:

தென்மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு நிவாரண நிதி வழங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளசேதத்தை பார்வையிட்டு சென்ற நிதி அமைச்சர் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்து அறநிலையத்துறையில் உள்ள சொத்துக்களை பாஜவினர் ஆக்ரமித்து வைத்து இருந்தனர். அந்த நிலத்தை திராவிட மாடல் அரசு மீட்டுள்ளது. அறநிலையத்துறை கோயில் வளாகத்தில் பக்தர்கள் சங்க அலுவலகத்தை வைத்துக்கொண்டு பணத்தை பிரித்துகொண்டு இருந்தனர். அந்த சங்கத்தை இந்த அரசு அகற்றியது.

குமரி மாவட்டத்தில் 100 கோயில்களை புனரமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சிவாலய ஓட்டத்தில் உள்ள கோயில்களை சீரமைக்கவும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவும் ரூ.15 கோடி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை பணியை பாஜ அரசு கிடப்பில்போட்டுள்ளது. இதனை வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் அரசியல் செய்கிறார். பா.ஜ மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறது. இவ்வாறு மேயர் மகேஷ் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அகமது உசேன், கண்ணன், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், திக மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில சிறுபான்மை அணி துணைச்செயலாளர் ஜோசப்ராஜ், மாவட்ட தொமுச செயலாளர் ஞானதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரகுமார், பாபு, லிவிங்ஸ்டன், அணி அமைப்பாளர்கள் டாக்டர்கள் ஆனந்த், சுரேஷ், இ.என்.சங்கர், சரவணன், சி.டி.சுரேஷ், அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், வர்த்தக அணி தாமரைபாரதி, நாகர்கோவில் மாநகர திமுக துணை செயலாளர் வேல்முருகன், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பா.ஜ. மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது appeared first on Dinakaran.

Tags : B.J. ,Mayor ,Nagercoil Nagercoil ,Marxist Communist Party ,Union BJP government ,BJP ,
× RELATED சென்னையில் சாலைகள் மற்றும்...