×

கேபா என்னும் பாமா பாபா

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வங்காளத்தில் இருக்கும் தாரா சக்தி பீடத்தை ஒட்டிய மயானம். நட்ட நடுராத்திரி. கூகையும், ஆந்தையும் கோர ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது. அந்த கோரமான மயானத்தில், அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தார் கைலாச பதி பாபா. அவர் முன்னே கைகட்டி வாய் பொத்தி நின்று கொண்டிருந்தார், ஒரு மனிதர். பார்க்க பித்தனைப் போல காணப்பட்டார். ஊரும் அவரைப் பித்தன் என்றுதான் சொல்லி அழைத்தது.

ஆனால், உண்மையில் அவர் ஒரு பெரிய பக்தர். ஊரில் பெரிய பண்டிதரான சர்வானந்த சட்டர்ஜியின் மகனாகப் பிறந்தவர் இவர். ஆனால், சிறுவயது முதலே எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தார். இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் அத்தனை வீட்டிற்கும் சென்று, அவர்கள் வீட்டில் இருக்கும் அம்பிகையின் திரு உருவத்தை திருடிக் கொண்டு வந்து, இவர் தனியாக அமர்ந்து விடிய விடிய பூஜை செய்வார்.

வீட்டு பூஜை அறையில் இருந்த விக்ரகங்கள் எல்லாம் காணவில்லையே, என்று ஊர் மக்கள் பதறிக் கொண்டு, தேடி வருவார்கள். இவர் ஆனந்தமாக அதை பூஜை செய்து கொண்டு இருப்பார்.
“ஏனடா இப்படி செய்தாய்?’’ என்று அவரை அதட்டுவார்கள். இவர் சிரித்த படியே, “அம்பிகை, எனக்கு சரியாக பூஜை நடக்கவில்லை… நீ வந்து பூஜை செய் என்று, எனக்கு கட்டளையிட்டாள். அதனால்தான் இப்படி செய்தேன்’’ என்று சொல்வார் இவர். இவர் பொய் சொல்கிறார் என்று சொல்லி, ஊரே இவரைப் பழித்தது. அம்பிகையின் பாதங்களை தவிர வேறு எதிலும் சிந்தனை செல்லாத மனமுடையவர்.

இவரது தந்தை இறந்தபின், தாய் மாமாவின் வீட்டில், மாடு மேய்க்கும் வேலைக்குச் சென்றார். அப்போது மாடுகளை காட்டுக்கு ஓட்டிக்கொண்டு போகும் சமயம், காட்டில் ஒரு செம்பருத்திப் பூவைக் கண்டார். பூவின் செம்மை நிறத்தைக் கண்டதும், இவருக்கு உதிக்கின்ற செங்கதிர் போன்ற அம்பிகையின் அழகு உருவம் நினைவுக்கு வந்தது.

அவ்வளவுதான் அப்படியே அம்பிகையை நினைத்துக்கொண்டு சமாதியில், சிலைபோல நின்றுவிட்டார். மாடுகள் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டன. வெறும் கையோடு வீடு திரும்பிய இவரை, மாமா கடுமையாகக் கண்டித்தார். பிறகு இவரைத் தனது தங்கையின் வீட்டிற்கே மீண்டும் அனுப்பிவிட்டார்.தந்தை போன பின் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. வீட்டின் நிலையை முன்னுக்குக் கொண்டுவர மகனை அருகில் இருந்த, தாரா மாதா கோயிலில் வேலைக்கு சேர்த்துவிட்டாள் இவரது தாயார். ஊர் பெரியவர்களின் கை கால்களைப் பிடித்து இவரை வேலைக்குச் சேர்ப்பதற்குள், அந்த அம்மையாருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

கோயிலில் வேலைக்குச் சேர்ந்த இவருக்கு, முதல் முதலில் கொடுக்கப்பட்ட வேலை, அம்பிகையின் பூஜைக்காக செம் பருத்திப் பூக்களை பறித்து வரும் வேலைதான். சொல்லவே வேண்டாம். மாடுகளை மேய்க்கச் சென்றபோதே, ஒரே ஒரு செம்பருத்தி பூவை பார்த்து, தாரா தேவியின் நினைவில் தன்னை தொலைத்தவர். இப்போது செம்பருத்தி பூக்களை பறித்து வர அனுப்பினால், என்ன ஆகும்? நேரம்தான் கடந்தது. கோயிலுக்கு பூக்கள் வந்து சேர்ந்த பாடு இல்லை.

பூ பறிக்கச் சென்ற இவரை, தேடி வந்த கோயில் ஊழியர்கள், செம்பருத்திச் செடியின் அருகே தன்னை மறந்து பிரம்மை பிடித்தவர் போல நின்றுகொண்டிருக்கும் இவரைப் பார்த்தார்கள். அன்றிலிருந்து இவரை “கேபா’’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது பைத்தியம் என்று வங்காளமொழியில் அழைக்க ஆரம்பித்தார்கள். அவருடைய நிஜப் பெயரான பாமா சரண் சட்டர்ஜி மறைந்துபோய், “பைத்தியம் பாமா’’ என்ற பெயர் அவருக்கு நிலைத்து விட்டது. ஆனால், பாமா கேபா இதை எல்லாம் நினைத்து மனம் தளரவே இல்லை. நிலையான மனதோடு தாரா மாதாவை மனமார பூஜித்துவந்தார்.

தாரா சக்தி பீடத்தில் ஒரு நாள் பூஜை நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே.. இருந்த பாமா கேபாவுக்கு பல சந்தேகங்கள் வந்தன. தாரா, சக்தி பீடத்தில் காட்சி தரும் தாரா மாதாவின் சிலை, நிஜமாகவே தாரா மாதாதானா அல்லது வெறும் சிலையா? வெறும் சிலையாக இருந்தால் எதற்கு ஒவ்வொரு வேளையும் அன்னம் படைக்கிறார்கள்? இல்லை கோயிலில் இருப்பது மாதா தாரா தேவியே என்றால், அவள் பார்க்க இந்த சிலையில் இருப்பது போலதான் இருப்பாளா? மாதா தாராவை நான் பார்க்க முடியுமா? மாதா தாராவோடு நான் பேச முடியுமா? இப்படி பல சந்தேகங்கள் பாமா கேபா மனதில் ஓடியது.

இந்த கேள்விகளை எல்லாம் கோயில் பூசாரியிடம் கேட்டார், பாமா கேபா. பாமா கேபாவின் ஞான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஆகவே, தாரா சக்தி பீடத்தை ஒட்டிய மயானத்தில் தவம் இருக்கும் கைலாசபதி பாபாவிடம் சென்றால் உனக்கு விடை கிடைக்கும் என்று சொல்லி அவரை அனுப்பினார்.கைலாசபதி பாபா, பெரிய தாரா உபாசகர் ஆவார்.

தச மகா வித்யாவில் மிகமிக முக்கியமான வித்யா, தாரா வித்யா. தச மகாவித்யா என்பது, மிகவும் சக்தி வாய்ந்த, தேவியின் பத்து வடிவங்களை உபாசிக்கும் முறை. அந்த தேவியின் பத்து வடிவங்களில், மிகமிக முக்கியமானது தாரா தேவியின் வடிவம். அந்த தேவியின் வடிவத்தை உபாசித்து அந்த உபாசனையில் சித்தியும் பெற்றவர் கைலாசபதி பாபா.

செம்மை நிறத்தில் ஒரு கோவணம் கட்டிக் கொண்டு, கையில் ஒரு திரிசூலம் வைத்துக் கொண்டு, கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை தரித்துக்கொண்டு, அவர் காட்சி கொடுக்கும் விதமே பக்தி மயமாக இருக்கும். மயானத்தில் அமர்ந்து கொண்டு சதா, தாரா தேவியின் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பார், அவர். அவரை நாடி தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வந்தார், பாமா கேபா. இவர் வந்து தன்னுடைய கேள்விகளை எல்லாம் கேட்டு முடித்தார். ஆனால், கைலாசபதி பாபா இவரை திரும்பிகூட பார்க்கவில்லை.

ஆனாலும் இவரும் விடாப்பிடியாக தினமும் வந்து கைலாசபதி பாபா காலில் விழுந்து, தாரா மாதாவைத் தரிசிக்கும் வழியை உபதேசிக்கும் படி மன்றாடினார். அப்படித்தான் இன்றும், குருவான கைலாசபதி பாபா முன், தாரா மாதாவைத் தரிசிக்கும் ஆவலோடு காத்திருந்தார். அவரோ வாயே திறக்கவில்லை. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பொழுது விடியும் நேரமும் வந்தது. இனி இன்றைக்கு குரு நமக்கு உபதேசம் செய்யமாட்டார் என்று பாமா கேபாவுக்கு புரிந்தது.

ஏனெனில் தாரா மாதாவின் மந்திரத்தை உபதேசிப்பதும், ஜபிப்பதும், நடு ஜாமத்தில் செய்வதே சிறப்பு. நேரம் கடந்துவிட்டதால் இனி தனக்கு பதில் கிடைக்காது என்ற முடிவோடு, பாமா கேபா அங்கிருந்து விலக ஆரம்பித்தார். அப்போதுதான் கேட்டது அந்த குரல். ஆன்மாவின் உள்ளே புகுந்தது. அதை உலுக்கும் குரல் “நில்’’ என்று ஒலித்தது. நின்றார். திரும்பினார். அழைத்த குருவை கண்களில் நீர் வடிய தரிசித்து, கை குவித்து நின்றார்.

“நாளை நிறைந்த அமாவாசை. நடுஜாமத்தில், இந்த மயானத்திற்கு வா. தாரா மாதாவை தரிசிக்கும் வழியை சொல்கிறேன்’’ என்று சொன்னவர், மீண்டும் தியானத்திற்குச் சென்றுவிட்டார். அதைக்கேட்டு, பாமா கேபா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அங்கும் இங்கும் குதித்தார், கொண்டாடினார், கூத்தாடினார். குருநாதர் சொன்ன அந்த அமுத வேளைக்காகக் காத்திருந்தார். நட்ட நடு ராத்திரி அமாவாசை இரவு. தாரா சக்தி பீடத்தை ஒட்டிய மயானம். அங்கே தாரா மாதாவின் மந்திரத்தை உபதேசம் செய்து, பாமா கேபாவை தாரா சக்தி பீடத்திலேயே தவம் இருக்க சொன்னார் கைலாசபதி பாபா. வசிஷ்டர் தவம் செய்த இடம் இன்னமும் தாரா பீடத்தில் இருக்கிறது. அங்கே அமர்ந்து தவம் செய்தால் விரைவில் மந்திரம் சித்தியாகும் என்ற நம்பிக்கை இன்னமும் நிலவி வருகிறது. வசிஷ்டர் தவம் செய்த இடத்தை “வசிஷ்டர் சமாதி’’ என்று அழைக்கிறார்கள்.

அங்கே அமர்ந்துகொண்டுதான் பாமா கேபா தவம் செய்தார் என்று சொல்கிறார்கள். விரைவிலேயே சித்தியும் அடைந்து தாரா மாதாவின் அருளையும், தரிசனத்தையும் பாமா கேபா பெற்றார். அவரது அதீத பக்தியைக் கண்ட கைலாசபதி பாபா, அவரை தாரா பீடத்தின் அதிபதியாக ஆக்கினார். தாரா மாதாவின் அருளால் இவரது வாழ்வில் நிகழ்ந்த அதிசயங்கள் ஏராளம் ஏராளம்.
இவரது தாயார் மறைவின் போது இவர் அந்திம கிரியை செய்துகொண்டிருந்தார். அப்போது ஊர் எங்கும் கனமழை கொட்டியது. ஆனால், தாரா பீட மயானத்தில், இவரது அன்னையின் சிதை எரியும் இடத்தில் மட்டும் ஒரு சொட்டு மழை பெய்யவில்லை. தாரா மாதாவின் அருளால், இந்த பூமியில் தனக்கு மாதாவாக வந்தவரின் அந்திமக் கிரியை வெகு அற்புதமாக நடத்தினார்.

இன்றளவும், தாரா சக்தி பீட மக்கள் இந்த அற்புதத்தைச் சொல்லிச் சொல்லி பூரிப்பார்கள். பாமா கேபா, தாரா வித்யாவின் உச்சியை அடைந்தது, நிர்வாண சந்நியாசியாக தாரா சக்தி பீட மயானத்தில் திரிவார். அப்போது ஒருவர், ஏன் இப்படி நிர்வாணமாக மயானத்தில் திரிகிறீர்கள் என்று இவரை ஏளனமாக கேட்டாராம். அதற்கு இவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம்.“என்னுடைய அம்மா தாராதேவி மயானத்தில்தான் வசிக்கிறாள். தந்தையான பரமேஷ்வரனும் மயானத்தில்தான் வசிக்கிறான். இருவருமே நிர்வாணமாக மயானத்தில் திரிகிறார்கள். அவர்களது மகனான நானும் அவர்களை போலத் தானே இருப்பேன்’’ என்று சொன்னாராம்.

அதே போல, மற்றொரு முறை, தாரா சக்தி பீடத்தில், தாரா தேவிக்கு படைக்க வைத்திருந்த நிவேதனத்தை, அம்பிகைக்கு படைக்கும் முன்னமே எடுத்து உண்டுவிட்டார், பாமா கேபா. இதனால், கோப மடைந்த கோயில் நிர்வாகிகள், அவரை கோயிலை விட்டு அடித்து துரத்தினார்கள். ஆனால், பாமா கேபா இது எதையும் சட்டை செய்யாமல் தாரா மாதாவை ஜெபித்து கொண்டே இருந்தார். அன்று இரவே, அந்த ஊரின் மகாராஜாவின் கனவில் தாரா மாதா தோன்றினாளாம்.

“என்னுடைய மகன், என் ஆணையின் பேரில் தான், எனது பிரசாதத்தை உண்டான். என் மகனை நீங்கள் அடித்து துரத்திவிட்டீர்கள். மகனை துரத்திய இடத்தில் நான் எப்படி இருப்பேன்? நானும் கிளம்புகிறேன்’’ என்று சொன்ன படி, தாரா தேவி ஊரை விட்டு கிளம்புவது போல, அந்த மன்னனின் கனவில் தோன்றினார். கனவை விட்டு விழித்த மன்னன், பதறிக் கொண்டு ஓடிவந்தான். பரம பக்தரான பாமா கேபாவின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு வேண்டினான்.

நந்தா ஹண்டி என்ற தொழு நோயாளி, பாமா கேபாவின் மீது அதிகமாக மரியாதையும், பக்தியும் கொண்டு இருந்தார். அவர் தினமும், பாமா கேபாவுக்கு உணவு கொண்டு வந்து சேவை புரிந்து கொண்டிருந்தார். அவர் மீது கருணை கொண்ட பாமா கேபா அவர் செய்யும் உபசாரங்களை ஏற்றுக் கொண்டார். ஊரே அவர் மீது வீசும் துர்நாற்றத்தை கண்டு ஒதுக்கிய போது, அவர் மனதில் வீசும் அன்பு என்னும் வாசனையை உணர்ந்து, அவரை ஆதரித்தார் பாமா கேபா.

இப்படி ஒரு நாள், நந்தா ஹண்டி, பாமா கேபா பாபாவுக்கு உணவு கொண்டு வந்தார். அதை ஆசையுடன் பெற்றுக் கொண்ட பாபா, தனது காலடி மண்ணை எடுத்து, தாரா மாதாவின் மந்திரத்தை ஜெபித்து, நந்தா ஹண்டியின் கையில் கொடுத்தார். அந்த மண்ணை உடலெங்கும் தேய்த்து கொள்ளும் படி சொன்னார். நந்தா ஹண்டியும் கொஞ்சம்கூட யோசிக்காமல், அப்படியே செய்தார் என்ன ஆச்சரியம்! அவரது உடலில் இருந்த தொழுநோய் அப்படியே விலகியது.

அதே போல, பால கிராமத்தில் இருந்து, நிம்மாய் என்ற ஒரு பக்தர், பல நாட்களாக, வயிற்று வலியால் அவதிப்பட்டார். ஆனாலும், தினமும் விடாமல் தாரா சக்தி பீடதேவிக்கு தன்னால் முடிந்த சேவையை செய்து வந்தார். இப்படி இருக்கும் சமயம், ஒருமுறை தாரா பீடத்தில் தேவிக்காக புனிதமான ஒரு அக்னி வளர்த்தார், நிம்மாய். அந்த அக்னியில், பாமா கேபா பாபா தன்னுடைய சுருட்டை பற்ற வைத்தார். அதை கண்டு கோபம் கொண்ட நிம்மாய், பாபாவை கண்ட படி ஏசினான் திட்டினான்.

பாபாவுக்கு என்ன தோன்றியதோ தெரியாது. எட்டி அவனுடைய வயிற்றில் உதைத்தார். அவர் உதைத்த உதையில் சுருண்டு பூமியில் விழுந்துவிட்டான் நிம்மாய். சுற்றி இருந்தவர்கள் அவன் மடிந்தே விட்டான் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அவன் சிறிது நேரத்தில் கண்களை விழித்தான். விழித்தபோது, அவனுக்கு சுத்தமாக வயிற்று வலியே இல்லை. பாபாவின் பாதம் பட்டு வயிற்றுவலி பறந்துபோய்விட்டது.இதை போலவே ஒருவன் தீராத காச நோயோடு இவரிடம் வந்தான். அவனது கழுத்தை நெரித்துக் கொண்டே தாரா மந்திரத்தை ஜெபித்தார், பாமா கேபா. அவன் மூச்சுவிட முடியாமல் மயங்கினான். கண்களை அவன் விழித்த போது பூரணமாக குணமாகி இருந்தான்.

பாமா கேபா பாபாவின் பெருமையை அறிந்து கொண்ட ஒருவன், ஒரு செல்வந்தரின் மகனின் தீராத நோயை தீர்த்து வைப்பதாக சொல்லி அதற்கு சன்மானமாக பல பணத்தை வாங்கினான். அந்த செல்வந்தர் மகனை, பாமா கேபா முன்னே கொண்டு வந்தான். பாமா கேபா அவனையும் செல்வந்தர் மகனையும் பார்த்தார். “இவன் செத்தவன்’’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே செல்வந்தர் மகனும் அடுத்த நாளே இறந்தான்.

சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வார்கள். தாரா மாதாவின் அருளால் பூரண சித்தி அடைந்த, பாமா கேபா பாபா இந்த கலியுகத்தில் நம்மோடு வாழ்ந்த ஒரு சித்த புருஷர் என்றால் அது மிகையல்ல. இவருக்கு தாரா சக்தி பீடத்தில் கோயில் கட்டி வணங்குகிறார்கள் ஊர் மக்கள். ராம கிருஷ்ண பரம ஹம்சரின் சம காலத்தவர் இவர். ராம கிருஷ்ணர், காளி உபாசகர். இவர் தாரா உபாசகர் அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், இருவரும் பக்தியிலும், சித்தியிலும் சமமானவர்கள்தான். இப்படிப் பட்ட சித்த புருஷர்களை வணங்கி இறைவனின் அருளை நாமும் பெறுவோம்.

ஜி.மகேஷ்

The post கேபா என்னும் பாமா பாபா appeared first on Dinakaran.

Tags : Kepa ,Bama Baba ,Kumkum ,Anmigam ,Tara Shakti Peedam ,Bengal ,Kailasa Pati Baba ,Keba ,
× RELATED கர்ப்பிணிகளை ரிலாக்ஸாக்கும் ஓவியப் புத்தகங்கள்!