×

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனத்தை பஞ்சுமிட்டாயில் கலந்தால் சட்டரீதியான நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை, பிப்.9: பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தால் விற்பனையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சதீஷ்குமார் எச்சரித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை காமராஜ் சாலை விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே கடற்கரை மணல் பரப்பில் விற்பனை செய்யப்பட்டு வரும் பஞ்சுமிட்டாயின் தரம் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. மெரினா கடற்கரையில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநில இளைஞர்களை பிடித்து அவரிடம் இருந்து பஞ்சுமிட்டாய் ஆய்வு செய்து பறிமுதல் செய்தார்.

அதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட ரசாயன பொருளால் (ரோடமென் பி) எளிதில் புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது என செய்தி கிடைத்ததும் தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து எங்களுடைய குழு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக, இந்த பஞ்சு மிட்டாய் கடற்கரையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிய வந்தது. எனவே, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் மெரினா கலங்கரை விளக்க காவல் நிலைய போலீசார் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு பஞ்சு மிட்டாய் வடமாநில தொழிலாளர்கள் தான் விற்பனை செய்து வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு முடிவுகள் வரும் வரை பெற்றோர்கள் இந்த கலர் நிறைந்த பஞ்சுமிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். முதற்கட்டமாக இந்த சோதனை அவசர சோதனையாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தால் சட்டரீதியான நடவடிக்கை விற்பனையாளர் மீது எடுப்பதற்காக காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.

அதேபோல் வரக்கூடிய காலங்களில் சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்களான மீன் வகைகள், பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். பஞ்சு மிட்டாய் உற்பத்தியை பொறுத்தவரையில் சென்னையில் மிகப் பெரிய அளவில் எந்த தொழிற்சாலைகளும் இயக்கப்பட்டு வரவில்லை. விற்பனை செய்யக் கூடிய நபர்கள் தங்களின் வீடுகளிலேயே இவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களின் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் உண்மைத்தன்மை தொடர்பாக கூடிய விரைவில் தரவுகள் அடங்கிய தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெல்ட், காலணி ரசாயன வகை
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய பஞ்சுமிட்டாயில் நிறத்திற்காக தொழிற்சாலைகளில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக எளிதில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. பஞ்சு மிட்டாய் நிறத்திற்காக பயன்படுத்தக்கூடிய நிறம் பெல்ட், காலணி, ஆடை உள்ளிட்டவைக்காக பயன்படுத்தக்கூடிய ரசாயன வகைகள்.

The post புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனத்தை பஞ்சுமிட்டாயில் கலந்தால் சட்டரீதியான நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Food safety department ,Chennai ,Satish Kumar ,Chennai Marina Beach ,Kamaraj Road Beach ,Vivekananda House ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...