×

திராவிட மாடல் ஆட்சியில் தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயில் வாசலில் காகிதம் எரிப்பு மற்றும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் நகை திருட்டு குறித்து, தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரவாயல் மரகதவல்லி சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் கோயிலில் ரூ.73.76 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோயில் அலுவலகம், மடப்பள்ளி, தரைத்தளம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டியும், கோயில் அலுவலகம், மடப்பள்ளி மற்றும் தரைத்தளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைத்தார். பின்னர், அமைச்சர் அளித்த பேட்டி: இந்த கோயிலுக்கு உபயதாரர் நிதியில் சுமார் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 5 நிலை ராஜகோபுரம் கட்டுகின்ற திருப்பணி விரைவில் தொடங்கும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,360 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோயில் முன்புறம் தனிநபர் ஒருவர் காகித துண்டுகளை தீயிட்டு எரித்த காட்சி கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து, கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கோயிலுக்கு வெளியில் நடந்திருந்தாலும், புகாரின் அடிப்படையில் காவல்துறை புலன் விசாரணை நடத்தி வருகிறது.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனின் நகையை உதவி அர்ச்சகர் திருடி, அடகு கடையில் அடமானம் வைத்திருந்தார். அந்த நகையை கோயில் நிர்வாகம் மீட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியானது சட்டத்தின்படி நடக்கின்ற ஆட்சி என்பதால் தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திராவிட மாடல் ஆட்சியில் தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Tags : Dravidian ,Minister ,PK Shekharbabu ,Chennai ,Mailai Kapaleeswarar Temple ,Savaran ,Tiruvekadu Devi Karumariyamman Temple ,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...