×

தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல்: இன்டர்நெட் தடை; 6 போலீசார் படுகொலை; ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன

இஸ்லாமாபாத்: தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடந்தது. அப்போது இன்டர்நெட் தடை செய்யப்பட்டது. 6 போலீசார் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் 2018ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆனால் பரிசுப்பொருள் ஊழல் வழக்கில் இம்ரான்கான் பதவி கடந்த 2022 ஏப்ரல் 22ம் தேதி தேர்தல் ஆணையத்தால் பறிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. தற்போது இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 336 உறுப்பினர்களில் 226 எம்பிக்கள் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக 5,121 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 மாகாண தேர்தலில் 12,695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக பாகிஸ்தான் முழுவதும் 6,50,000 பாதுகாப்புவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 90,675 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. காலையில் குறைந்த எண்ணிக்கையிலே வாக்குச்சாவடிக்கு மக்கள் வந்தனர். லாகூரில் உள்ள மாடல் டவுன் பகுதி தொகுதியில் நவாஸ் ஷெரீப் வாக்களித்தார். அவருடன் அவரது மகள் மரியம் மற்றும் கட்சித் தலைவர்களும் வந்திருந்தனர். அவரது சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் லாகூரில் வாக்களித்தார். முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சிந்து மாகாணத்தில் உள்ள நவாப் ஷா பகுதியில் வாக்களித்தார்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதால் நேற்று வாக்குப்பதிவு நடந்த போது இன்டர்நெட் பல இடங்களில் தடை செய்யப்பட்டது. ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன. இருப்பினும் தேரா இஸ்மாயில் கானில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த தேர்தலுக்காக லண்டனில் அடைக்கலம் புகுந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார். அவரது தலைமையிலான கட்சி பிஎம்எல்-என் கட்சி 4வது முறையாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் இம்ரான்கட்சியும், பிலாவல் பூட்டோ-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் போட்டியிட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

The post தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல்: இன்டர்நெட் தடை; 6 போலீசார் படுகொலை; ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Afghanistan ,Iran ,Islamabad ,Imran Khan ,Pakistan Tehreek-e-Insaf ,2018 parliamentary elections ,Afghan, Iran ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...