×

சில்லி பாய்ன்ட்…

* புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் பிப்.21ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் இறுதிக் கட்டமாக கொல்கத்தா, பாஞ்ச்குலாவில் தலா 11 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பதான் அணிகள் முறையே 77, 76 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன. கொல்கத்தா களத்துக்கான ஆட்டம் இன்று தொடங்குகிறது. சென்னை அணியான தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றால் 2வது முறையாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறலாம்.

* வங்கதேசத்தில் ‘பங்ளாதேஷ் பிரிமீயர் லீக் (பிபிஎல்)’ டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி ஜன.19ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மார்ச் 1ம் தேதியுடன் முடிகிறது. இந்த அணிகளில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஓமன் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை நடந்த பாதிக்கும் மேற்பட்ட லீக் ஆட்டங்களில் ரங்க்பூர் ரைடர்ஸ், சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிகள் முதல் 2 இடங்களில் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடர் பிப்.17ம் தேதி தொடங்குகிறது. அதனால் பாபர் அஸம், முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், முகமது வாசிம், முதுமது நவாஸ் ஆகியோர் தொடரில் இருந்து விலகுகின்றனர். அதே நேரத்தில் முகமது ஹாரிஸ், நசீம் ஷா உள்ளிட்ட பாக் வீரர்கள், இனி பிபிஎல் தொடரில் தொடர்வார்களா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாக வில்லை.

* நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2வது டெஸ்ட் பிப்.13ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. நியூசி. ஆல் ரவுண்டர் டேரில் மிட்செல் (32), முதல் டெஸ்டின்போது காயமடைந்தார். அதனால் 2வது டெஸ்டில் இருந்து மிட்செல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக நியூசி. தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். மிட்செல்லுக்கு பதிலாக அணியில் ஓ ரூர்க் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், மிட்செல்லுக்கு பதிலாக களமிறங்கும் வாய்ப்பு வில் யங்குக்கே கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கேன் வில்லியம்சன் மனைவிக்கு மகப்பேறு காலம் நெருங்குவதால், அடுத்து நடைபெற உள்ள ஆஸி.க்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் (பிப். 21, 23, 25) வில்லியம்சன் விளையாட மாட்டார் என்பதையும் பயிற்சியாளர் உறுதி செய்துள்ளார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi League ,Kolkata ,Panchkula ,Jaipur ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...