×

சென்னையில் பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள் குவிந்ததால் பதற்றம்; மின்அஞ்சல் அனுப்பியவருக்கு வலை

சென்னை: சென்னையில் உள்ள பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். வெடி குண்டு பீதியால் பள்ளிகள் முன்பு பெற்றோர் திரண்டதால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. சென்னை கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், முகப்பேர், பிராட்வே, துரைப்பாக்கம் என ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் என 13 பிரபல தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை ‘jhonflow1@proton.me’ என்ற பெயரில் தனித்தனியாக மின்னஞ்சல் வந்தது.

அந்த மின்னஞ்சலை பள்ளி நிர்வாகம் பார்த்த போது, அதில், ‘உங்கள் பள்ளியில் 2 மிக சக்திவாய்ந்த குண்டுகள் உள்ளன. அவை டஜன் கணக்கான மற்றும் நூற்றுக்கணக்கான உயிர்களை, எந்த தவறும் செய்யாத குழந்தைகள் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடும். நேரம் சென்று கொண்டே இருக்கிறது. உடனடியாக பள்ளி கட்டிடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றுங்கள். இல்லையென்றால் இந்த ரத்தக்களரி சோகத்தை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளாமல், பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வாழ்க்கை உங்கள் கையில் மட்டுமே உள்ளது. இதை தவிர்க்க காவல்துறையை அழையுங்கள்.’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த ஊழியர்கள் உடனடியாக நிர்வாகத்திடம் மிரட்டல் மின்னஞ்சல் குறித்து தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சில பள்ளிகளில் மாதாந்திர தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி மேற்கு அண்ணாநகரில் உள்ள பிரபல பள்ளியில் இருந்து காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அந்தபள்ளிக்கு சென்று சோதனை நடத்தினர். அடுத்த 10 நிமிடத்தில் முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் இருந்து மிரட்டல் வந்திருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு அடுத்தடுத்து 13 பள்ளிகளில் இருந்து காவல்துறைக்கு வெடி குண்டு மிரட்டல் புகார் வந்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

முன்னதாக போலீசாரும் ஆசிரியர்களும் அனைத்து மாணவ, மாணவிகளையும் உடமைகளுடன் பத்திரமாக விளையாட்டு மைதானத்தில் நிறுத்தினர். வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல், ‘மின்னல் வேகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியது.’ இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு அந்தந்த பள்ளிகள் முன்பு குவிந்தனர். இதனால் பதற்றமான நிலை காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சோதனையில் ஒரு வெடி குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் இது வெறும் புரளி எனதெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் இது வெறும் புரளி யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று தெரிவித்தனர். இருந்தாலும், பெற்றோர்கள் விடாப்பிடியாக நிர்வாகத்திடம் சண்டை போட்டு குழந்தைகளை அழைத்து சென்றனர். இதனால் சென்னையில் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பதற்றமான சூழலே காணப்பட்டது. 13 தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.

* ஜி-மெயில் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் கடிதம்
சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஜி-மெயில் விடுத்துள்ளார். ஆனால் மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி-மெயில் முகவரி தனி நபருக்கான முகவரியில் இருந்து வரவில்லை. அது ஒரு சர்வீஸ் மெயில் மூலம் வந்துள்ளது. எனவே மிரட்டல் விடுத்த நபர் குறித்து தகவல்களை ஜி-மெயில் நிறுவனத்திடம் இருந்து பெற சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மிரட்டல் விடுத்த நபரின் ஐடி மற்றும் முகவரி, தொடர்பு எண் சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்ததும் உடனே கைது நடவடிக்கை இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள் குவிந்ததால் பதற்றம்; மின்அஞ்சல் அனுப்பியவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...