×

சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2504 கோடியில் வங்கி கடன்: ‘பெண்கள் முன்னேற்றம் தான் இலக்கு’ என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: பெண்கள் முன்னேற்றம் தான் இலக்கு என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என ஈரோட்டில் நடந்த 3 லட்சத்து 563 மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ.2504.18 கோடி மதிப்பிலான வங்கிக்கடன், சுழல்நிதிவழங்கும் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஈரோடு சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குதல், பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற வளர்ச்சி திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் அரசு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள 37,305 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 லட்சத்து 563 பயனாளிகளுக்கு ரூ.2504.18 கோடி மதிப்பிலான வங்கிக்கடன், சுழல்நிதி மற்றும் மின் வாகனங்களை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழு மேம்பாட்டு வாழ்வாதார நிறுவனம் சார்பில் ரூ.2500 கோடியில் வங்கி கடன்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இன்று மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2330 சுய உதவிக்குழுக்களுக்கு இன்று ரூ.100.34 கோடி வங்கி கடன் உதவி வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.230 கோடியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை ரூ.25 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இலக்கு எட்டப்படும். ஒன்றிய அரசு கடந்த 2016ம் ஆண்டில் இருந்து ரூ.6லட்சம் கோடி வரியாக செலுத்தி உள்ளோம். ஆனால் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு ரூ.2.50 லட்சம் கோடி மட்டுமே திருப்பி வழங்கி உள்ளது. அதாவது தமிழகம் ரூ.1 வரியாக கொடுத்தால் அதில் 29 பைசாவை தான் திருப்பி வழங்குகிறது.

அரசு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு எந்த அளவு ஆதரவாக உள்ளதோ அதே ஆதரவை அவர்கள் அரசுக்கும் ஆதரவளித்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றம் தான் இலக்கு என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதேபோல் அரசு பஸ்சில் இலவச பயணம் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் மாதம் ரூ.900 சேமிக்க முடிகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் நான் பயன்படுத்துகிறேன். இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2504 கோடியில் வங்கி கடன்: ‘பெண்கள் முன்னேற்றம் தான் இலக்கு’ என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravitha Model Government ,Minister ,Adyanidhi Stalin ,Erode ,Minister's Assistant ,Dinakaran ,
× RELATED 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து...