×

தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோயிலில் ரூ.73.76 இலட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.39.58 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோயிலில் ரூ.39.58 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டும், கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து கண்டறியப்பட்டு அதனை பாதுகாத்திடும் வகையில் ரூ.73.76 இலட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மார்கசகாய ஈஸ்வரர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து தொடங்கப்பட்ட பணிகள் முடிவுக்கு வாராமல் இருந்ததை அறிந்து, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பணிகளை விரைவுப்படுத்தி 2022 ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில் குடமுழுக்கினை சிறப்பாக நடத்தினோம். இக்கோயிலுக்கு உபயதாரர் நிதியில் சுமார் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டுகின்ற பணி விரைவில் தொடங்கி வைக்கப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,360 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

நில மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு இதுவரை ரூ.5,594 கோடி மதிப்பிலான 6,180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல கோயில் சொத்துக்களை பாதுகாத்திடும் வகையில் மயிலாப்பூரில் நவீன ரோவர் கருவி உதவியுடன் தொடங்கப்பட்ட நில அளவை பணிகளில் இதுவரை 1,60,191 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கோயில்களின் முகப்புகளில் கம்பீரமான ராஜகோபுரம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தினை செயல்படுத்திடும் வகையில் 2022 – 2023 ஆம் ஆண்டில் 6 கோயில்களுக்கு ராஜகோபுரம் அமைக்கவும், 2023 – 2024 ஆம் ஆண்டில் 15 கோயில்களுக்கு ராஜகோபுரம் அமைக்கவும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சட்டமன்ற அறிவிப்பில் அறிவிக்கப்படாத 3 கோயில்களையும் சேர்த்து மொத்தம் ரூ.55.50 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கபாலீஸ்வரர் கோயில் முன்புறம் நேற்றைய முன்தினம் இரவு தனிநபர் ஒருவர் காகித துண்டுகளை தீயிட்டு எரித்த காட்சியானது கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கோயிலுக்கு வெளியில் நடந்திருந்தாலும் கோயிலின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனின் நகையை உதவி அர்ச்சகர் திருடி, அதை அடகு கடையில் அடமானம் வைத்திருந்தார். அந்த நகையை திருக்கோயில் நிர்வாகம் மீட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியானது சட்டத்தின்படி நடக்கின்ற ஆட்சி என்பதால் தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி, சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் ராஜன் சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரமணி வசந்தன், கோயில் செயல் அலுவலர் அருட்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Maduravayal ,Markasakaya Ishwarar Temple ,
× RELATED மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று...