×

தேர்தல் நடத்தை அமலுக்கு வரும் முன் செயற்கைகோள் முறையில் சுங்கக் கட்டணம் வசூல்: ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் தகவல்

புதுடெல்லி: தேர்தல் நடத்தை அமலுக்கு வரும் முன் செயற்கைகோள் முறையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முறை அமலுக்கு வரும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற காரணங்களால் ‘ஃபாஸ்டேக்’ முறை செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று மாநிலங்களவையில் கூறுகையில், ‘நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கவரி வசூலை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இத்திட்டத்தை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் போது, எவ்வித தடையுமின்றி வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியும். சம்பந்தப்பட்ட வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்கள் செயற்கைகோள் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படும். அதன்பின் வாகனம் செல்லும் தூரத்தின் அடிப்படையில் ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த 2016ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் கட்டண முறையில் இதுவரை மொத்தம் 8.13 கோடி ஃபாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.

The post தேர்தல் நடத்தை அமலுக்கு வரும் முன் செயற்கைகோள் முறையில் சுங்கக் கட்டணம் வசூல்: ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Road Transport ,Minister ,New Delhi ,Union ,Road ,Transport Minister ,Nitin Gadkari ,Road Transport ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...