×

சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம்

சென்னை : சிறுபான்மையினர் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ”பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே மேலும் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இந்து கலாச்சாரத்துக்கு எதிராக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதுபோல அண்ணாமலை கருத்து உள்ளது. சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது.

ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரியான அண்ணாமலை, சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார். அண்ணாமலை பேச்சு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அண்ணாமலை பேட்டி அளித்து 400 நாள் கடந்த பிறகு வன்முறை நடக்கவில்லை என்ற அண்ணாமலை வாதத்தை ஏற்க முடியாது. அண்ணாமலையின் வீடியோ பதிவு, எக்ஸ் தளத்தில் நிரந்தரமாக உள்ளதால் இதுபோன்ற பேச்சு எந்நேரத்திலும் வெடிக்கக்கூடியதாகும். வன்முறையை தூண்டாவிட்டாலும் வெறுப்பு பேச்சு, வெறுப்பு பேச்சுதான்,” இவ்வாறு அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Judge ,Anand Venkatesh ,Chennai ,J. K. ICOURT ,PRESIDENT OF ,STATE ANNAMALA ,YouTube ,
× RELATED யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல்...