×

முத்துக்கள் முப்பது-‘‘தை” அமாவாசையும் திருநாங்கூர் தரிசனமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தை அமாவாசை 9-2-2024 திருநாங்கூர் கருடசேவை 10-2-2024

1. முன்னுரை

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பு. அந்த மாதத்தின் பெருமைக்கு ஏதாவது ஒரு ஆன்மிக நிகழ்வு பிரதானமாக இருக்கிறது. உதாரணமாக வைகாசி எடுத்துக் கொண்டால் அதில் வரும் விசாகம் சிறப்புடையதாக இருக்கிறது. ஆனி மாதத்திலே அபிஷேகங்கள் சிறப்புடையதாக இருக்கின்றன. குறிப்பாக ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்லுவார்கள். அதைப்போல தை மாதம் மிக மிகச் சிறப்புடைய ஒரு மாதமாக இருக்கிறது. மார்கழி மாதத்தில் நின்று போன சுப நிகழ்ச்சிகள், ‘‘எப்பொழுது தை பிறக்கும்?’’ என்று காத்திருந்து மகிழ்ச்சியோடு துவக்கப்படும் மாதமாக இருக்கிறது.

2. தை மாத அமாவாசையை ஒட்டிய நிகழ்வுகள்

புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) சிறப்புடையது. அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதி சிறப்புடையது. அந்த வகையில் தையில் வரும் அமாவாசை மிக மிகச் சிறப்புடையது. தட்சிணாயன காலத்தில் முதல் மாதமான ஆடி மாத அமாவாசை எத்தனை சிறப் புடையதோ, அதை போன்ற உத்தராயண காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும் சிறப்புடையது.

அந்த அமாவாசையை ஒட்டிய பல நிகழ்வுகள் நடப்பதைத் தான் இந்த “முத்துக்கள் முப்பது” பகுதியில் நாம் பார்க்க இருக்கின்றோம். தை அமாவாசை நீத்தார் வழிபாடு, தை அமாவாசையில் பல்வேறு திருக்கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளின் விபரம், தை மாதம் அமாவாசை ஒட்டி திருநாங்கூர் பிரதேசத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கருடசேவை, இந்த மூன்று விஷயங்களை முன்னிறுத்தி இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பினை வழங்குகின்றோம்.

3. கிரக தோஷமற்ற அமாவாசை

பொதுவாக நிறைமதி நாளான பௌர்ணமியில் தெய்வ பூஜைகள் பிரசித்தமாக நடைபெறும். இது வளர்பிறையாகும். அதற்கு அடுத்த நாள் தேய்பிறை தொடங்கி விடும். அதன் நிறைவு நாளாகிய அமாவாசை நாள் என்பது முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள் என்று நம்முடைய சமய மரபில் அமைத்து தந்திருக்கிறார்கள் பொதுவாக திதிகள் 15 இருக்கின்றன இதில் அமாவாசை திதி முக்கியமானது. மற்ற திதிகளின் ஏதாவது ஒரு கிரகம் தோஷம் அடையும். ஆனால் அமாவாசை அன்று எந்த கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு-கேது மற்றும் கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமாவாசை அன்று பரிகாரம் செய்ய வேண்டும் என்பார்கள்.

4. மகரத்தில் வரும் மறைமதி நாள்

அமாவாசை என்பது சந்திரனும் சூரியனும் ஒன்றாக இணையும் நாள். இந்த தினத்திற்கு “பிதுர் திதி” என்ற பெயரும் உண்டு. சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால், இந்நாளை “மறைமதி நாள்” என்று அழைப்பர். அதில் தை மாதம் என்பது மகர மாதம். சனியினுடைய ராசிக்கு உரிய மாதம். கர்மகாரகனான சனியினுடைய ராசியில் சூரியனும் சந்திரனும் இணையும் நாள்தான் அமாவாசை. சனி சூரியனின் பிள்ளை என்று வரலாறு. அதன்படி பார்த்தால் அப்பனாகிய சூரியனும், அன்னையாகிய சந்திரனும், பிள்ளையாகிய சனியின் வீட்டில் ஒன்றிணைகின்ற அற்புத நாள் தான் தை அமாவாசை. எனவே அன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு இயற்றுவது மிக முக்கியமாகச் சொல்லப்படுகின்றது.

5. ஏன் முக்கியம் தை அமாவாசை?

பொதுவாகவே 96 நாட்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்து வைத்திருக்கிறது. தெய்வ வழிபாடு குறைந்தாலும், நீத்தார் வழிபாடு குறையக்கூடாது என்பது சங்க காலத்தில் இருந்து பின்பற்றப்படுகின்ற ஒரு நிலையான விதி. அது மட்டுமில்லை நீத்தார் வழிபாடு நிறைவேற்றாமல், நாம் தெய்வ வழி பாட்டுக்கு வரவே முடியாது. அதனால் தான், எந்த சுப காரியங்கள் நடந்தாலும் கூட, அதன் தொடக்க நிகழ்ச்சியாக “நாந்தி ச்ராத்தம்” அல்லது “நாந்தி சோபனம்” என்று முன்னோர்கள் வழிபாட்டை செய்துவிட்டு, பிறகு தான் சுப காரிய வழிபாட்டைத் துவங்குகின்றார்கள்.

6. தை மாத அமாவாசை கட்டாயம்

96 நாட்களிலும் (ஷண்ணவதி) நீத்தார் வழிபாடு நிறைவேற்றுவது இக்காலத்தில் கடினம். என்றாலும் 12 மாதப்பிறப்புகளிலும் 12 அமாவாசைகளிலும், ஆக, 24 நாட்களிலும் மற்றும் அவர்கள் மறைந்த திதியில் ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் வழிபாட்டையும் சேர்த்தால் 25 வழிபாடுகள் செய்ய வேண்டும். இதை முறையாகச் செய்ய முடியாதவர்கள், குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை நாள் அன்று நீத்தார் வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும். அதுவும் இயலாதவர்கள், உத்தராயண கால முதல் மாதமான தை மாத அமாவாசையிலாவது இந்த வழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டும்.

7. ஏன் இந்த நாளில் செய்ய வேண்டும்?

இந்த நாளில் முன்னோர்களுக்கு அதிகமான பசியும் தாகமும் ஏற்படும் என்பதால் எள்ளும் நீரும் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்தத் தர்ப்பணம் செய்யும் பொழுது, வலது கை குழித்து, சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீர் வார்க்க வேண்டும். இந்த தர்ப்பண நீர் பூமியின் ஈர்ப்பு சக்தியையும் மீறி மேலே எழும்பும் என்பது ஐதீகம்.

ஸ்வதா தேவி (ஸ்வதா நமஸ் தர்பயாமி) எனப்படும் தேவதை, நம்முடைய முன்னோர்கள் எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால், அண்டங்களுக்கு அப்பால் இருந்தாலும் கூட, தேடிச்சென்று, இந்த வழிபாட்டு பிரசாதங்களைத் தந்து, அவர்களுடைய தாகத்தையும் பசியையும் ஆற்றி, ஆசியை பெற்று தருகிறாள். இதுவரை பித்ருக்களுக்கு தர்ப்பணம் போன்ற கர்ம காரியங்களை செய்யாதவர்கள் கூட “தை அமாவாசை” அன்று செய்து அளவிட முடியாத பலனைப் பெற வேண்டும்.

8. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

நீர் நிலைக்குச் செல்ல முடியாதவர்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு தந்து அருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். இந்த நாளில் முழு விரதம் இருக்க வேண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது. பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம் முதலியவை கொடுக்கலாம். அரச மர வழிபாடு செய்யலாம். ஏழைகளுக்கு உணவு, உடை வழங்கலாம். நகம் வெட்டுதல், முடிவெட்டுதல், முக சவரம் செய்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.

9. வழிபாட்டின் பலன்கள்

தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம். நீத்தார் வழிபாட்டை அமாவாசை அன்று முறையாக நிறைவேற்றினால்,

1.நம் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும்

2.சுபகாரியத் தடைகள் விலகும்

3.சந்தான விருத்தி ஏற்படும்

4.தொழில் அபிவிருத்தி அடையும்

5.சொத்து சுகங்கள் அதிகரிக்கும்

6.வாகன யோகம் ஏற்படும்

7.நோய் நொடிகள் அகலும்

8.அமானுஷ்யமான சக்திகள் அண்டாது.

9.கெட்ட சக்திகள் விலகும்

10.ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும்

11.இதுவரை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட கிரக சாபங்கள் நீங்கி, அவை வரங்களாக மாறி வற்றாத நற்பலன்களை அள்ளி அள்ளி வழங்கும்.

10. எப்படிச் செய்யலாம்?

நீத்தார் பூஜையை வீட்டில் நிறைவேற்றலாம். வீட்டில் உள்ள கிணற்றடியில் நிறைவேற்றுவது சிலாக்கியமானது. அல்லது ஏதேனும் ஒரு நீர் நிலை இருக்கும் இடத்தில் சென்று எள்ளும் நீரும் இறைத்து வழிபடலாம். அன்று தலைவாழை இலை போட்டு முக்கியமான பதார்த்தங்களுடன், நிறைய காய்கறிகளுடன், அன்னம் படைத்து, அதை காக்கைக்குமிட்டு பின் உண்ணலாம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து அன்னதானம் வழங்குவது சாதாரண நாளிலே அன்னதானம் வழங்குவதை விட அதிக பலன் தரும்.

11. அமாவாசை சிறப்பு கோயில்கள்?

தமிழகத்தில் தை அமாவாசை பிதுர் தர்ப்பண வழிபாட்டை நிறைவேற்றுவதற்கு சிறப்பான கோயில்களும் நீர் நிலைகளும் உண்டு. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே இந்த வழிபாட்டை முறையான மந்திரங்களுடன் நிறைவேற்றுவது மிகச்சிறந்தது. அதைப்போலவே வைணவர்கள் திருப்புல்லாணி சேதுக்கரையை மிக முக்கியமான இடமாகத்தேர்ந்தெடுப்பார்கள். வேதாரண்யம், கோடிக்கரை முதலிய கடற்கரைகள் மற்றும் பூம்புகார் முதலிய பகுதிகள் நீர்க்கடன் நிறைவேற்றுவதற்கான புண்ணிய இடங்கள். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிர பரணி முதலிய நதிக்கரைகளில் நீர்க்கடனை நிறைவேற்றுவதற்கான துறைகள் உண்டு. அங்கே சென்று இதைச் செய்வது மிகச் சிறந்த பலனை அளிக்கும். வழிபாட்டின் பூரணத்துவத்தைக் கொடுக்கும்.

12. வீர பத்திரருக்கு அமாவாசை வெற்றிலை மாலை

1.முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனை அழிக்க கன்னியாக அவதரித்த கன்னியாகுமரி அன்னையின் அருள் தவம் இங்கே காணக் கிடைக்காத வரம். இத்தலத்தில் அமாவாசை நாளில் நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்.

2.சிவபெருமானின் அம்சமாக விளங்குபவர் வீரபத்திரர். தட்சனின் யாகத்தைத் தடுப்பதற்காக வீரபத்திரரை உருவாக்கி சிவபெருமான் அனுப்பினார். அவர் மிக வரப்பிரசாதி. அமாவாசை வழிபாடு அவருக்கு உரியது. அவருக்கு சிங்கபெருமாள் கோயில் அருகே அனுமந்தபுரம் என்ற இடத்தில் கோயில் உண்டு. அங்கு அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தீராத நோய் தீரும். மாறாத வெற்றி சேரும்.

13. உத்தர வாஹினியில் அமாவாசை

1.பொதுவாகவே ஒரு ஆறு வடக்கு நோக்கி திரும்பும் பகுதியிலே எந்த வழிபாடு நடத்தினாலும் அது பல மடங்கு வெற்றியைத் தரும். காவிரி நதிக்கரையில் கஞ்சனூர் என்று சுக்கிரனுக்கு உரிய தலம் உண்டு. அங்கே காவிரி வடபால் திரும்புகிறது. அந்த இடத்தில் நீத்தார் வழிபாடு நிறை வேற்றுவதற்கு பலரும் வருவார்கள். அதைப்போல வைகை நதியில் ஆறு வடக்கு நோக்கி திரும்பும் பகுதியில் உள்ள தலம் திருப்புவனம்.

காசிக்கு நிகரான தலம். இந்த தலத்திற்கு ‘‘பிதுர் மோட்ச புரம்’’ என்று பெயர். தை அமாவாசை அன்று நீராடி, நீத்தார் கடனை நிறைவேற்றி சுவாமியை வணங்குவது அற்புதப் பலன்களைத் தரும். மதுரையில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த தலத்தில் நந்தி சற்று சாய்ந்த நிலையில் இருப்பதைப் பார்க்கலாம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் இங்கு வந்த பொழுது நதியில் உள்ள மணல் எல்லாம் அவர்களுக்கு சிவலிங்கமாக காட்சி அளித்ததால் அங்கே தங்களுடைய காலால் மிதிக்க விரும்பாமல் மறு கரையிலிருந்து பாடினதாக வரலாறு உண்டு.

14. திலதர்ப்பணபுரியில் அமாவாசை

மயிலாடுதுறை திருவாரூர் பாதையிலே பூந்தோட்டம் அருகே உள்ள ஒரு தலம் தில தர்ப்பணபுரி. திலம் என்றால் எள். தர்ப்பணம் என்றால் எள்ளும் நீரும் இறைக்கும் நீத்தார் சடங்கு. முன்னோர்களை நினைத்து வழிபட்டு இறைவனை வணங்குகின்ற அமைப்பு உள்ள தலங்களில் இது ஒன்று. இங்கே முன்னோர்களுக்கும், முன்னோர்களை நினைத்து வழிபாடு இயற்றுபவர்களுக்கும் சிவபெருமான் நற்கதியைத் தருகின்றார். அதனால் இவருக்கு முத்திஸ்வரர் என்று பெயர். அம்பிகைக்கு சொர்ணவல்லித் தாயார் என்று பெயர். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை தை அமாவாசையில் செய்வது நல்லது.

15. நிகும்பலா யாகம்

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் அருகே உள்ள தலம் அய்யாவாடி. அங்கே பிரத்தியங்கரா தேவி திருக்கோயில் உள்ளது. கரிய நிறமும் சிங்கமுகமும் கொண்டு பதினெட்டு கைகளுடன் காட்சி தரும் பிரத்தியங்கரா தேவி அமாவாசை வழிபாட்டுக்குரிய பிரதான தேவதையாக அருள்புரிகிறாள். ஒவ்வொரு அமாவாசையிலும் நிகும்பலாயாகம் இயற்றப்படுகிறது. தை அமாவாசை அன்று இந்த யாகத்தில் கலந்து கொண்டு வழிபடுவது வெற்றியைத்தரும்.

16. நவகிரக தோஷம் போகும்

ராமநாதபுரம் அருகே இருக்கக்கூடிய ஒரு தலம் தேவிப்பட்டினம். இங்கே நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட நவகிரக பிரதிஷ்டை உண்டு. தை அமாவாசை அன்று இங்கு கடலில் நீராடி இந்த நவகிரகங்களை வழிபட்டால் எத்தகைய கிரக தோஷமும் நீங்கிவிடும். இங்குள்ள தீர்த்தத்திற்கு சக்ர தீர்த்தம் என்று பெயர். ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஈரோட்டுக்கு அருகில் உள்ள பவானி கூடுதுறை. இது அமாவாசை வழி பாட்டுக்கு உரிய ஒரு மிக முக்கியமான தலம்.

இங்கே பவானி ஆறும் காவிரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் தோன்றிய ஈஸ்வரன் என்பதால் அவருக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர். அன்னைக்கு வேதாம்பிகை என்று பெயர். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம், இலந்தை மரத்தை தல விருட்சமாகக் கொண்டது. இங்குள்ள முக்கூடல் துறையில் நீராடி நீத்தார் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம்.

தாமிரபரணியின் கரையில் அமைந்தது. அகத்திய மகாமுனிவர் பார்வதி பரமேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைப் பார்த்த தலம். கங்கை நதியே தன்னுடைய பாவங்களை இங்கே வந்து தாமிரபரணியில் கரைத்துக் கொள்வதாக ஒரு வரலாறு உண்டு. தை அமாவாசை அன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர்கள் வழிபாட்டை இயற்றி பின் சுவாமியை தரிசிப்பது அற்புதமான அமைப்பு.

17. பல ஆலயங்களில் அமாவாசை ஒட்டி உற்சவங்கள்

தை அமாவாசையை ஒட்டி பல திருத்தங்களில் பிரம்மோற்சவங்களும் சிறப்பு உற்சவங்களும் நடைபெறுகின்றன. திருவள்ளூர் வீரராக சுவாமி கோயில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இங்கே உள்ள தீர்த்தத்திற்கு ஹ்ருத்த பாபநாசினி என்று பெயர். எத்தகைய பாவத்தையும் தீர்க்கும் வல்லமை இந்த புஷ்கரணிக்கு உண்டு. அமாவாசை அன்று இங்கே நீராடி நீத்தார் கடனை நிறைவேற்றி. பின் வீரராகவ பெருமாளை தரிசிப்பது வழக்கம். இதற்காக பல்லாயிரம் மக்கள் இங்கு வந்து கூடுவது உண்டு.

அமாவாசை அன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுவதும், தென்காசி விஸ்வநாதனுக்கு இலட்ச தீபக் காட்சியும், அழகர் கோயில் கள்ளழகருக்கு தைலக்காப்பும், திருநெல்வேலி நெல்லையப்பருக்கு பத்திர தீபக் காட்சியும் நடைபெறும். வைதீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமாரசுவாமி உற்சவம் இந்த தை மாத அமாவாசையை ஒட்டியே நடைபெறும்.

18. தை அமாவாசையும் திருக்கடையூரும்

அமாவாசை அன்று எத்தனையோ கோயில்களில் புனித நிகழ்வுகள், மறக்க முடியாத நிகழ்வுகள் நடைபெற்று இருப்பதைப் பார்க்கிறோம். அதில் ஒரு திருக்கோயில் தான் திருக்கடையூர். திருக்கடையூர் என்றாலே மார்க்கண்டேயனுக்கு ஆயுள் தோஷத்தை தீர்த்து, என்றும் 16 என்ற வரத்தைத் தந்த தலம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அங்கே வாழ்ந்தவர் அபிராமி பட்டர்.

அபிராமி பட்டர் என்றாலே நமக்கு அவர் இயற்றிய சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி நினைவுக்கு வந்துவிடும். அம்பாளை வணங்குபவர்களுக்கு அதைவிட ஒரு சிறந்த பாராயணம் இல்லை. அபிராமி அந்தாதியை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு எந்தக் குறையும் வருவதில்லை. ஆனால் அந்த அபிராமி அந்தாதி பாடுவதற்கு காரணமாக அமைந்த நாள் தை அமாவாசை.

19. அமாவாசையா? பௌர்ணமியா?

அபிராமி பட்டர் திருக்கடையூர் அபிராமி மீது அகலாத அன்பு கொண்டவர். அன்னையின் திருமுகத்தைத் தவிர அவர் மனதில் மனதில் வேறு எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் அவருக்கு அபிராமி அபிராமி அபிராமி தான். இதைப் போன்ற ஒரு பக்தி நிலை முற்றும் போது பித்த நிலை என்னும் பரவசம் தோன்றும். அந்த பரவச நிலை நாளும் நீடித்திருக்கும். அவர்களுக்கு பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடு தெரியாது. ஒரு தை அமாவாசை அன்று சரபோஜி மன்னர் கடல் நீராடலுக்காக பூம்புகார் வந்தார்.

அவர் தஞ்சைக்கு திரும்பும் வழியில் அன்னை அபிராமியை தரிசிக்க வேண்டும் என்று திருக்கடையூருக்கு வந்தார் அரசு பரிவாரங்களுடன் வந்த மன்னர் உன்மத்த நிலையில் அமர்ந்திருந்த அபிராமி பட்டரைப் பார்க்கிறார். அபிராமி பட்டரின் பெருமையை அகில உலகமும் பரவச் செய்யவும் அவர் திருவாய்மொழியாக அபிராமி அந்தாதி பெறவும் எண்ணிய அன்னை ஒரு அற்புத திருவிளையாடலைத் துவக்குகின்றாள். வந்த மன்னர் பேச்சு கொடுத்துப் பார்க்கலாம் என்று அபிராமி பட்டரிடம் ‘‘ஐயா, இன்று என்ன நாள்?’’ என்று கேட்கிறார். அன்னையின் மதிமுகம் தம் நெஞ்சில் பௌர்ணமி போல் சுடர் விட்டு பிரகாசிப்பதைத் தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் சற்றும் தயங்காமல், ‘‘முழு நிலவு நாள்’’ என்று சொல்ல, மன்னரைச் சுற்றி இருந்தவர்கள் நகைக்கிறார்கள்.

இவரை பைத்தியம் என்றுதான் நாங்கள் சொன்னோமே. நீங்கள் இவரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே! அமாவாசை நாளை, பௌர்ணமி நாள் என்று சொல்பவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? என்று மன்னரின் கோபநிலையை ஏற்றி விட, மன்னர் திரும்பவும் கேட்கிறார்.‘‘முழு நிலவு நாள் என்று சொல்லுகின்றீர்களே, நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். இன்று முழு நிலவு நாள் தானா?’’ அபிராமி பட்டர் மறுபடியும் சொல்லுகின்றார்.‘‘இன்று முழு நிலவு நாள் தான். அதில் என்ன சந்தேகம்? அதோ நிலவு தெரிகிறது.’’

எங்கே தெரிகிறது? ‘‘இங்கே தெரிகிறது’’இந்த வாதம் முற்றுகிறது.

20. அபிராமி அந்தாதி பிறக்கிறது

“இவர் உன்மத்தர்தான்” என்று எண்ணிய அரசரும், அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார்.

அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். தன்னுடைய மனதில் தரிசிக்கக் கூடிய பௌர்ணமி, இருள் சூழ்ந்த இந்த மனிதர்களின் கண்களுக்கும் தெரிய வேண்டும் என்ற வேகத்தோடு பாடுகிறார். அப்படித் தெரியாவிட்டால் ‘‘தன்னுடைய பக்தி பொய்; அன்னை பொய்; எல்லாம் பொய் ஆகிவிடும்’’ என்று எண்ணி, உருக்கத்துடன் பாடல்களைத் தொடர்ந்து பாடுகின்றார்.

21. தை அமாவாசையில் உதித்த நிலா

அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

என்ற பாடலை பாடிய உடன், “இன்னமும் தன் பிள்ளையை சோதிக்க வேண்டாம்” என்று நினைத்த அன்னை, தன்னுடைய காதின் குழையை தூக்கி வானில் வீச, அது சூரியனையும் சுட்டுவிடும் பேரொளியோடு தகதகவென வானில் பிரகாசிக்கிறது. இப்படி ஒரு முழு நிலவை யாரும் தங்கள் வாழ்நாளிலும் தரிசித்தது கிடையாது. அவர்கள் அபிராமி பட்டரின் பக்தியை உணர்கிறார்கள். அடிபணிகிறார்கள். சரபோஜி மன்னர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனு பவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

22. தை அமாவாசை

திருமங்கையாழ்வார் புறப்பாடு

சிகரம் வைத்தால் போல் நடைபெறும் நிகழ்ச்சி சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் திவ்யதேசத்தின் 11 எம்பெருமான்களும், திருமங்கை ஆழ்வார் முன் செல்ல, பின்னால் கருட வாகனத்தில் காட்சி தரும் திருநாங்கூர் கருட சேவை உற்சவம். இந்த உற்சவம் கடந்த 130 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருநாங்கூர் என்னும் சிறிய ஊரில் ஒன்று கூடி இந்த கோலாகலக் காட்சியைக் கண்டு களிக்கின்றனர். திருநாங்கூர் கருட சேவை விழா என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது.

1.தை அமாவாசை அன்று திருமங்கையாழ்வாருக்கு மண்ணி ஆற்றங்கரையில் (காவிரியின் கிளை ஆறு) நடைபெறும் மஞ்சள் குளி உற்சவம்.

2.அமாவாசைக்கு மறுநாள் பிற்பகலில் நடைபெறும் ஆழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சியும், இரவு ஒரே நேரத்தில் 11 எம்பெருமான்களும் கருடன் மீது ஆரோகணித்து திருவீதி வலம் வரும் திருநாங்கூர் கருட சேவை நிகழ்ச்சி. மூன்றாவது பகுதியாக கருட சேவைக்கு மறுநாள், தென்திருப்பதி என்று சொல்லப்படும் அண்ணன் பெருமாள் கோயிலில், அடியார்கள் கூடி நடத்தும் கலியன் ஒலிமாலை நிகழ்ச்சியும் உண்டு.

23. திருநாங்கூர் பதினொரு சைவத் திருப்பதிகள்

(ஏகாதச ருத்திரர்கள்)

திருநாங்கூரில் 11 சிவாலயங்கள் உள்ளன. வைகாசி மாதத்தில் 11 சிவன் களுக்கும் கருடசேவை போல ரிஷப சேவை நடக்கிறது. அந்த ஏகாதச ருத்ரர்கள் இருக்கக்கூடிய திருத்தலம் தான் திருநாங்கூர். (சீர்காழிக்கு அருகே உள்ளது.)

அவர்கள் விபரம் வருமாறு.

1. திருநாங்கூர் மதங்கேஸ்வரர்

2. திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்

3. திருயோகீஸ்வரம் யோகநாதசுவாமி

4. கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) சுவர்ணபுரீஸ்வரர்

5. திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்

6. அல்லிவிளாகம் நாகநாதசுவாமி

7. திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்

8. திருநாங்கூர் கயிலாயநாதர்

9. திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்

10. பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்

11. அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்.

24. திருநாங்கூர் பெருமாள் திருத்தலங்கள்

வைணவத்தில் 11 என்ற எண் உயர்வானது. ஆழ்வார்கள் 12 பேரில், ஆண் உருவம் கொண்ட ஆழ்வார்கள் 11 பேர். பூமியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் மட்டுமே பெண் பிள்ளை. இதைப் போலவே 11 பெருமாள் திருத்தலங்களும் திருநாங்கூரைச் சுற்றி உண்டு. திருநாங்கூர் என்பது பதினொரு திருப்பதிகளைக் கொண்ட தொகுப்பு என்று சொல்லலாம்.

1. திருமணிமாடக்கோயில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2. திரு அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தர்)
3. திருச்செம்பொன்செய்கோயில் (செம்பொன் அரங்கர்)
4. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5. திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)

6. திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7. திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8. திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9. திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10. திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள்கேள்வன்)
11. திருக்காவளம்பாடி (கோபாலன்)

இந்த ஆண்டு இந்த தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை நிகழ்ச்சி 10.2.2024, சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதற்காக திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் அமாவாசை அன்று (09.02.2024) அதிகாலையில் ஆஸ்தானமான திருநகரி சந்நதியில் இருந்து புறப்படுகின்றார்.

25. மணிகர்ணிகாவில் ஆழ்வாருக்கு மஞ்சள் குளி

வயல் வெளிகளையும், சிறு ஓடைகளையும் கடந்து, மெல்லிய பனிக் காற்றில் மிக விரைவாக, தம்முடைய அவதார தலமான திருக்குறையலூர் சென்று அடைகின்றார். அங்கே உக்ர நரசிம்மர் பெருமாள் ஆழ்வாருக்கு காட்சி தர, அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ருக்காவளம்பாடி வந்து, கண்ணனுக்கு மங்களாசாசனம் செய்கின்றார். பிறகு திருமணிக்கூட எம்பெருமானை மங்களாசாசனம் செய்து விட்டு, திருப்பார்த்தன்பள்ளி வருகின்றார். அங்குள்ள எம்பெருமானை மங்களாசாசனம் செய்து விட்டு, மஞ்சள்குளி உற்சவ மண்டபத்துக்கு வருகின்றார். ஆழ்வார் பகல் 1 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், தமக்கு பஞ்ச சமஸ்காரம் செய்த திருநறையூர் நம்பியை மனதால் தொழுது தமிழால் வாழ்த்துகின்றார்.

அடுத்து, தன் உடலில் புகுந்து, உயிரில் கலந்து, தனக்கு இந்த உற்சவத்தை பரிசாக அளித்த அந்த அரங்கனை தெற்கு நோக்கித் தொழுது மங்களாசாசனம் செய்கின்றார். அதற்குப் பிறகு சகஸ்ர தாரையில், ஆழ்வாரின் ஆராதனைப் பெருமாளாகிய சிந்தனைக்கினியானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அந்த சேஷ தீர்த்தத்தால் ஆழ்வாருக்கும் அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருநறையூர் மற்றும் திருவரங்கத்திலிருந்து மாலை மரியாதை பரிவட்டங்கள் வருகின்றன. அவைகளெல்லாம் திருமங்கை ஆழ்வாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. திருப்பாவை சாற்றுமறை நடக்கின்றது.

26. ஏன் மஞ்சள் குளி உற்சவம்?

திருவரங்கத்தில் எம்பெருமானைத் தினம் துதித்துப் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர் திருமங்கையாழ்வார். கையில் தாளத்தோடும் அபிநயத்தோடும் அழகான தேவ கானத்தில் பாடும் இசை அரங்கனை மயக்கும். தை மாதத்தில் ஒரு அமாவாசை நாள். வடதிருக்காவேரியில் (கொள்ளிடம்) அரங்கனுக்கு மஞ்சள்பொடி உற்சவம் நடப்பது வழக்கம். அப்படித்தான் அன்றும் நடந்தது. வாசனாதி மஞ்சள் தைலக்காப்பு சாத்திக் கொண்டிருக்கிறார் அரங்கன். திருமங்கை ஆழ்வார் தம் இனிய குரலில் அரங்கனின் செவிகளை தமிழ் பாசுரங்களால் நிறைத்துக் கொண்டிருக்கிறார்.

பாசுரங்களில் மகிழ்ந்த அரங்கன் பரிசு தர எண்ணுகிறான். தான் அனுபவிக்கும் இந்த தைல காப்பை, திருமங்கை ஆழ்வாருக்கும் தர வேண்டும் என்று நினைத்து, ஆணையிடுகிறான். அன்றிலிருந்து தைலக் காப்பு உற்சவம் திருமங்கை ஆழ்வாருக்கும் நடக்கிறது. ஆழ்வார் காலம் வரை, திருவரங்கத்தில் நடந்தது. பின் இடம்மாறி, சீர்காழிக்கு அருகில் திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் அருகே, காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகா ஆற்றங்கரையில் நடைபெறுகின்றது.

27. தமிழ் கேட்கக் காத்திருக்கும் பெருமாள்

திருமஞ்சனம் முடிந்து மாலை திருமணிமாடக் கோயில், திருவண் புருடோத்தமன், திருவைகுந்த விண்ணகரம், திருசெம்பொன்செய் கோயில், திருத்தெற்றியம்பலம், திருஅரிமேய விண்ணகரம் முதலிய எம்பெரு மான்களை சேவித்து, தமிழ்பாடி, திருமணிமாடக் கோயில் திரும்புகின்றார். அங்கேயே (திருமங்கையாழ்வார் தங்குகின்றார்.

தை அமாவாசைக்கு மறுநாள், தம்மைப் பார்க்க வந்த திருமங்கையாழ்வாரை பார்த்து, அவர் தமிழைச் செவிகள் இனிக்க கேட்க வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய 11 எம்பெருமான்களும், தங்கள் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, திருமங்கையாழ்வார் தங்கியிருக்கக் கூடிய திருமணிமாடக் கோயிலுக்கு வந்து சேருகிறார்கள். திருநாங்கூர் கருட சேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இக்கோயில் மாடக் கோயில் என்பதற்கேற்ப மிகச் சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

28. பிற்பகலில் ஆழ்வார் மங்களாசாசனம்

திருமணிமாடக் கோயிலுக்கு எதிரே உள்ள இந்திர புஷ்கரணியை ஒட்டி நீண்ட அலங்காரப் பந்தல் இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வாழ்த்தொலி எழுப்ப 10.02.2024 சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு குமுத வல்லி நாச்சியாரோடு, கூர்மையான வேலை தோளில் சாய்த்துக் கொண்டு, சுடர்விடும் முகத்தோடும், சுந்தரத் தமிழோடும், ஒவ்வொரு பெருமானையும் கை கூப்பி சுற்றிவந்து, எதிரில் நின்று மங்களாசாசனம் செய்கின்றார். அந்தந்த திவ்ய தேசத்து பாசுரங்கள் பாடப்படுகின்றன. தமிழ் கேட்ட மகிழ்ச்சி எம்பெருமானின் முகத்தில் தாண்டவமாட, அவர்களுடைய திவ்ய பிரசாதம் திருமங்கை ஆழ்வாருக்கு வழங்கப்படுகின்றது.

29. திருமஞ்சனமும் அலங்காரமும்

பிறகு ஆழ்வாரும் எம்பெருமான்களும் உள் மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்கள். அங்கே ஒரே நேரத்தில் எல்லா எம்பெருமான்களுக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகின்றது. பிறகு அந்தந்த எம்பெருமான்களுக்கு கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரம் ஆகிறது. இந்தியா முழுவதி லிருந்தும் இந்த கண்கொள்ளா காட்சியை காண மக்கள் வெள்ளம் திரண்டு நிற்கிறார்கள். ஆங்காங்கு, உபன்யாசம், இன்னிசை நாம சங்கீர்த்தனங்கள், என்று திருநாங்கூர்களை கட்டி நிற்கிறது. இரவு 11 மணிவரை தரிசனமும் ஆராதனைகளும் நடக்கிறது. இவைகள் முடிந்து இரவு 11 மணியளவில் கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

30. திருநாங்கூர் 11 கருட சேவை

அதிர்வேட்டுகள் முழங்குகின்றன. ‘‘கோவிந்தா கோவிந்தா’’ என்ற கோஷம் விண்ணை முட்டுகிறது. திருமணி மாடக் கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான மக்கள் இந்த கருட சேவையை பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி மணவாள மாமுனிகள் தோளுக்கினியானில் முதலில் வெளியே வருகின்றார். அதற்கடுத்து அழகான அன்னவாகனத்தில் தன்னுடைய நாச்சியார் குமுத வல்லியாரோடு திருமங்கை ஆழ்வார் அருட்காட்சி தருகின்றார்.

அடுத்து வரிசையாக ஒவ்வொரு எம்பெருமான்களும் கருடாரூடனாய் வெளியே எழுந்தருளி காட்சி தருகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் வீதிகளில், விடிய விடிய இந்த வீதி உலா நடக்கிறது. இந்த ஆண்டு, இந்த வாய்ப்பு 10.02.2024 சனிக்கிழமை நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை நழுவ விடலாமா? வாருங்கள் திருநாங்கூர் செல்வோம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது-‘‘தை” அமாவாசையும் திருநாங்கூர் தரிசனமும் appeared first on Dinakaran.

Tags : Tirunangur ,Darshan ,Vaikasi ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே