திருமலை: ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா அடுத்த ராயனபாடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 40 வயது கூலித்தொழிலாளி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த தார் டிரம்மில் தவறி விழுந்தார். இதனால் வெளியே வராமல் சிக்கிக்கொண்ட அவர் கூச்சலிட்டார்.
ஆனால் இயந்திரங்கள் சத்தம் காரணமாக அவரது கூச்சல் யாருக்கும் கேட்கவில்லையாம். இதனிடையே அவ்வழியாக சாலை பணி காரணமாக போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டிருந்தது. சக தொழிலாளர்களும் பகுதி பகுதியாக தொடர்ந்து வேலை செய்து வந்த நிலையில் துரதிஷ்டவசமாக அவரது அலறல் யாருக்கும் கேட்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அவர் கூச்சலிட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து கூலித்தொழிலாளியை போராடி வெளியே மீட்டனர். இதையடுத்து சோர்வாக காணப்பட்ட அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post தார் டிரம்மில் சிக்கிய தொழிலாளி 2 நாட்களுக்கு பின் மீட்பு appeared first on Dinakaran.