×

புதுவை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், குழந்தையுடன் சாவு: உறவினர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுவை அரசு மகளிர் மருத்துவமனையில் தலைபிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி, குழந்தையுடன் இறந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (28). தனியார் கம்பெனி ஊழியரான இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சூரமங்கலத்தை சேர்ந்த தீபா (26) என்பவருடன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபாவுக்கு கடந்த மாதம் அவரது பெற்றோர் வளைகாப்பு நடத்தி தலைபிரசவத்துக்கு அழைத்துச் சென்றனர். எல்லைபிள்ளைச் சாவடியில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 3 மாதத்தில் இருந்தே அட்டைபோட்டு பரிசோதனை செய்து வந்துள்ளனர்.

இதனிடையே டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி கடந்த 2ம்தேதி தீபா, மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு தீபாவுக்கு பிரசவ வலி ஏற்படவே பணியிலிருந்த செவிலியர்கள் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி மருந்து, மாத்திரைகளை கொடுத்ததாக தெரிகிறது. அதன்பிறகு அவருக்கு இன்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், தீபாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென டாக்டர்கள் கூறியுள்ளனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து குழந்தையும், தீபாவும் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இன்று காலை தாயும், குழந்தையும் இறந்ததற்கான காரணத்தை கேட்டு மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மருத்துவமனையில் இரவில் பயிற்சி டாக்டர்கள் மட்டுமே இருந்ததாகவும், சீனியர் டாக்டர்கள் பணியில் இல்லை என குற்றம் சாட்டியதோடு ஆம்புலன்ஸ் டிரைவரை அவசர தேவைக்காக செவிலியர் தேடி அலைந்து பரிதவித்த தகவலையும் குமுறலுடன் தெரிவித்தனர். டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியத்தால் 2 உயிர்கள் பறிபோய் விட்டதாக கதறிய உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

The post புதுவை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், குழந்தையுடன் சாவு: உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Puduwai Government Hospital ,Puducherry ,Puducherry Government Women's Hospital ,Satish ,Abhishekappakkam ,Suramangalam ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...