×

ஒன்றிய அரசு அளிக்கும் நிதிப்பகிர்வை உணர்த்தும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் அல்வா வழங்கி நூதன போராட்டம்

சென்னை: ஒன்றிய அரசு அளிக்கும் நிதிப்பகிர்வை உணர்த்தும் வகையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திமுகவினர் மக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ம் தேதி ஒரே நாளில் அதிதீவிர கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த மிகத் தீவிர மழை 4 மாவட்டங்களையும் புரட்டிப்போட்டுவிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பொதுமக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது.

இதனையடுத்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் தமிழக வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழுவும் சென்னை மற்றும் தூத்துக்குடி வந்தது. இதனையடுத்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அப்போது தமிழக அரசு சார்பாக புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களை சரிசெய்ய ஒன்றிய அரசிடம் தமிழக அரசு 37,000 கோடி ரூபாயைக் கோரியது. பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தினர். இருந்த போதும் ஒன்றிய அரசு உரிய நிதி வழங்கவில்லையென திமுக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை பதிவு செய்தது.

இந்தநிலையில், ஒன்றிய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திமுக சார்பாக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் தொடங்கியுள்ளது. திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்காத ஒன்றிய அரசை விமர்சிக்கும் வகையில், துண்டு பிரசுரத்தோடு திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பஸ் நிலையத்தில் வரும் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு அல்வா வழங்கினர். அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீசில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ஜீரோ என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைத்து வழங்கி வருகின்றனர்.

The post ஒன்றிய அரசு அளிக்கும் நிதிப்பகிர்வை உணர்த்தும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் அல்வா வழங்கி நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,DMK ,Klambakkam bus station ,Alva ,CHENNAI ,Clambakkam bus station ,Mikjam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி...