×

தமிழகத்தை வஞ்சிக்காதே.. நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை அணிந்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்!!

டெல்லி :டெல்லியில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் கடுமையாக தாக்கியது. தென் தமிழகத்திலும் அதி கனமழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. 2 மாதங்கள் ஆகியும் ஒன்றிய அரசு இதுவரை உரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை. இதனிடையே ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் வெள்ளத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி தரவேண்டும் என்ற கோரிக்கை பற்றி அந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து பிப் 8ல் -ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக டி.ஆர்.பாலு அறிவித்து இருந்தார். அதன்படி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசுக்கு திமுக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

வெள்ள நிவாரண நிதி ரூ.37,000 கோடி கேட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என எம்பிக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை புறக்கணிப்போம், பாசிச பாஜகவை வீழ்த்துவோம், தமிழகத்தை வஞ்சிக்காதே, போன்ற கோஷங்களை எழுப்பி திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தமிழகத்தை வஞ்சிக்காதே.. நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை அணிந்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Parliament ,Union Government ,Delhi ,DMK MPs ,Chennai ,South Tamil Nadu ,MPs ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...