×

பரசுராமர் கேரளத்தில் அமைத்த 108 சிவாலயங்கள்

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரமாகும். இதில் அவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் குமாரனாகத் தோன்றினார். அவர் போர்க்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். குறிப்பாக, வில்வித்தையில் அவரை விஞ்சியவர் எவரும் இல்லை. அவர் மிகுந்த கோபம் உள்ளவர். எதற்கும் எவருக்கும் அஞ்சாதவர். தமது தந்தையான ஜமதக்னி முனிவரைக் கொன்ற கிருதவீர்யன் அவன் மகன் கார்த்தவீரியன் போன்றவர்களை அழித்தவர்.

கிருதவீர்யன் என்னும் அரசன் தன் தந்தையைக் கொன்றதால், அந்த குலத்தின் மீது கடும் கோபம் கொண்டு அனைவரையும் அழிப்பதில் மகிழ்ச்சி கொண்டவர். அவரால், அந்த குலமே அழிந்து விடும் நிலை உண்டானதால், காசிபன் என்ற முனிவர் அவரிடம் சென்று, அவர் அதுவரை வென்ற பூமியைத் தானமாகக் கேட்டார். ‘‘அப்படியே தந்தேன்’’ என்றார் பரசுராமர். பின்னர், காசிபர் அவரிடம் ‘‘நீ எனக்குத் தந்த பூமியை விட்டுச் செல்க’’ என்றார்.

உலகை ஜெயித்து வைத்திருந்த பரசுராமர் எல்லா இடத்தையும் காசிபரிடம் கொடுத்து விட்டதால், அவருக்குப் பூமியில் வசிக்க இடமில்லாமல் போய்விட்டது. அவர் மேற்கு மலைத் தொடர் மீது ஏறி நின்றார். கடல் ஆர்ப்பரிப்பதைக் கண்டார். தனது கொடிய பரசு(மழு) ஆயுதத்தை வீசிக் கடலிடம் ‘‘விலகிச் சென்று புதிய நிலப் பகுதியை அளிப்பாய்’’ என்றார். அவரது கோபத்திற்கு அஞ்சிய கடலரசன் நேரில் வெளிப்பட்டு, புதிய நிலப்பரப்பை அளித்ததுடன் அதில் அளவற்ற செல்வங்களைக் கொண்டுவந்து நிறைத்தான்.

அதைக் கண்டு மகிழ்ந்து பரசுராமர், புதிய உலகைப் படைத்தார். அதில் மகாதேவரான சிவபெருமானை வழிபடும் பொருட்டு 108 சிவாலயங்களை அமைத்தார். அவை பரசுராமப் பிரதிஷ்டாலிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அத்துடன் காவல் தெய்வங்களாக அனேக பகவதி ஆலயங்களையும் அமைத்தார். மேற்குமலைத் தொடருக்கும், அரபிக்கடலுக்கும் (மகோதை) நடுவில் அமைந்த அந்த நாடு பரசுராம சேத்திரம் என்று பெயர் பெற்றது.

அது வடக்கே கோகர்ணம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை விரிந்து செழிப்புடன் உள்ளது. அவருக்குப் பின்னும் விபீஷணன் முதலானவர்கள் அங்கு வந்து பரசுராமரை வழிபட்டதுடன், மகாதேவர் ஆலயங்களை அமைத்தனர். பரசுராமசேத்திரமே தமிழில், கேரளம் என்று அழைக்கப்படுகிறது. கேரளோற்பத்தி என்னும் நூல், கேரளம் உருவான கதையை விரிவாகக் கூறுகிறது. கேரளாவில் 108 தலங்களில் உள்ள 108 சிவாலயங்களான மகாதேவர் ஆலயங்களை அன்பர்கள் தேடிச் சென்று வழிபடுகின்றனர்.

இவை ஸ்ரீமத் தட்சண கைலாசம் எனப்படும் திருச்சூர், திருச்சிவப்பேரூர் வடக்கு நாதர் கோயில் தொடங்கி, சீரக்களம் மகாதேவர் வரை 108 ஆகும். இத்தலங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி அகவல் போல மலையாளத்தில் பாடியுள்ளனர்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

The post பரசுராமர் கேரளத்தில் அமைத்த 108 சிவாலயங்கள் appeared first on Dinakaran.

Tags : Parasurama ,Kerala ,Lord Vishnu ,Sage Jamadagni ,Renukadevi ,
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...