×

ரோஜா, கொய் மலர்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

ஊட்டி, பிப். 8: காதலர் தினம் நெருங்கும் நிலையில் ரோஜா மற்றும் கொய் மலர்களுக்கு நீலகிரியில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் காதலர் தினம் தற்போது இந்தியாவிலும் இளசுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வளைத்தலங்கள் அதிகரித்த பின் இந்தியாவிலும் கொண்டாட துவங்கிவிட்டனர். இதனால், காதலர் தினத்தன்று வாழ்த்து அடடைகள், பரிசு பொருட்கள் ஆகியவைகளை மட்டுமின்றி தற்போது ரோஜா மலர்கள், கொய்மலர்கள் என மலர்களை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. இதனையே பலரும் வாங்கி பரிசாக வழங்குகின்றனர். நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்தளவே உள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு கொண்டு வரப்படுகிறது.

அதே சமயம், கொய்மலர்கள் நீலகிரியில் தாராளமாக கிடைப்பதால், அதனை வாங்கி பலரும் பரிசாக வழங்க துவங்கிவிட்டனர். இதனால், ஆண்டு தோறும் காதலர் தினம் கொண்டாடப்படும் வாரங்களில் மட்டும் ஊட்டியில் ரோஜா மலர் மற்றும் கொய் மலர்களுக்கு கிராக்கி அதிகமாக காணப்படும். வரும் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தற்போதே மலர்களுக்கான புக்கிங் துவங்கிவிட்டது. சாதாரணமாக ஒரு ரோஜா மலர் ரூ.5 முதல் 10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று ரூ.20 முதல் ரூ.50 வரை விலைபோக வாய்ப்புள்ளது. அதேபோல், கொய்மலர்களான லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம் உட்பட பல்வேறு கொய்மலர்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் விவசாயிகளுக்கு தற்போது புக்கிங் துவங்கியுள்ளது. புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தன்று இளவட்டங்கள் அதிகளவு ஊட்டிக்கு வருவதை வாடிக்கையாக ெகாண்டுள்ளனர்.
எனவே, அடுத்த வாரம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பரிசு பொருட்களுடன் காத்திருக்கும் ஏராளமான காதல் ஜோடிளை காண முடியும்.

The post ரோஜா, கொய் மலர்களுக்கு கிராக்கி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Valentine's Day ,Nilgiris ,India ,Facebook ,WhatsApp ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்