×

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ஓட்டுநர் இல்லா ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி இன்று தொடக்கம்: முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்களை இயக்க நிர்வாகம் திட்டம்

பூந்தமல்லி, பிப்.8: சென்னையில் இரண்டாம் கட்ட திட்டத்தில் இயக்க, டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, ஓட்டுநர் இல்லாத 138 ரயில்கள் மூன்று பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்த பிறகு ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில் தலா 3 பெட்டிகளை கொண்டிருக்கும். இந்த பெட்டிகள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 3 அல்லது 6 பெட்டிகளுடன் இயக்கப்படும். ரயில்கள் இயக்கத்துக்கு சிபிடிசி (கம்ப்யூட்டர் பேஸ்டு டிரெய்ன் கன்ட்ரோல் சிஸ்டம்) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க இந்த சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது.

ரயில் 80 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனால் அதிகபட்சமாக 90 விநாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க முடியும். மேலும் இந்த ரயிலில் பயணிகள் வசதியாக நிற்க இடவசதி, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், செல்போன், மடிக் கணினிகளுக்கு சார்ஜிங் வசதிகள் உள்ளன. ரயிலில் இருபுறமும் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அகலமான அவசரகால கதவுகள் அமைக்கப்படுகிறது. ஆபத்து காலத்தில் இதன் வழியே பயணிகள் வேகமாக வெளியேற முடியும். இந்த ரயில்கள் 3 வழித்தடங்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்படுகிறது. மாதவரம் முதல் சிப்காட், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களுக்கு ரயில்கள் வாங்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறியதாவது: தானியங்கி தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும். இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதன்படி இந்த ரயில்கள் தற்போது வடிவமைக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் ஒரு மாதத்திற்குள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். அதன்பிறகு சோதனை முயற்சிகள் செய்யப்படும். பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்கள் முதல் பகுதியாக அடுத்தாண்டு வழங்கப்படும். இந்த ஓட்டுநர் இல்லா ரயில்களின் முதல் சேவை 2026ல் தொடங்கப்படும். ஆரம்பத்தில் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் அவர்கள் உதவியின்றி ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

n பூந்தமல்லி- போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்கள் முதல் பகுதியாக அடுத்தாண்டு வழங்கப்படும். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களின் முதல் சேவை 2026ல் தொடங்கப்படும்..
n ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது. ரயில் 80 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனால் அதிகபட்சமாக 90 விநாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க முடியும்.
n இந்த ரயிலில் பயணிகள் வசதியாக நிற்க இடவசதி, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், செல்போன், மடிக் கணினிகளுக்கு சார்ஜிங் வசதிகள் உள்ளன.

The post சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ஓட்டுநர் இல்லா ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி இன்று தொடக்கம்: முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்களை இயக்க நிர்வாகம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Metro Administration ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை...