×

உரிய ஆவணம் இல்லாமல் ₹3.50 லட்சத்துடன் சிக்கிய வாலிபர்

திருவொற்றியூர், பிப்.8: வண்ணாரப்பேட்டை பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் ₹3.50 லட்சம் பணத்துடன் ஒரு வாலிபர் சிக்கினார். அவர் வைத்திருந்தது ஹவாலா பணமா என்ற கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஐஓபி வங்கி அருகே சந்தேகப்படும்படி நேற்று ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவரது பையை சோதனை செய்தபோது, அதில் ₹3.50 லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணம் உள்ளதா என விசாரணை செய்தபோது அந்த நபர் சரியான பதில் கூறவில்லை.

இதையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்தனர். பின்னர் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் சதாசிவம் மேற்பார்வையில், தண்டையார்பேட்டை ஆய்வாளர் ராஜன் தலைமையில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சையத் அகமது(21) என்பதும், மண்ணடி பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இவர் யாருக்காக பணத்தை எடுத்து வந்தார், அந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சையத் அகமது ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து சையத் அகமதுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post உரிய ஆவணம் இல்லாமல் ₹3.50 லட்சத்துடன் சிக்கிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Vannarappet ,Tax ,Tiruvottiyur Highway ,IOP Bank… ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...