×

விடுதலைப்புலிகளிடம் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்ற விவகாரம் யூடியூபர் சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை: வெளிநாட்டு ரகசிய தொடர்புகள், ஆயுத புரட்சி குறித்து சரமாரி கேள்வி

சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி உதவி பெற்ற விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி சாட்டை துரைமுருகன், இசை மதிவாணனிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022ம் ஆண்டு மே மாதம் போலீசார் நடத்திய வாகன சோதனையில், பைக்கில் வந்த 2 பேர் வெடி பொருட்கள், துப்பாக்கிகளுடன் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி என்பதும் இருவரும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருந்து வந்ததும் தெரிந்தது.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டதும், இதற்காக யூடியூப் மூலம் துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகள் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் 2 பேரும் ஈடுபட்டு வந்ததும், அதற்கு திருச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபரான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார்(33), நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன்(40), நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக உள்ள விஷ்ணு பிரதாப்(25). நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி(33) ஆகியோர் தொடர்பில் இருந்து வந்ததாகவும், ஆயுதப்புரட்சிக்கு தேவையான நிதி உதவியை இவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று தந்ததாகவும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர்.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள், சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்தனர். அதில், சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியானது. அதற்கான ஆதாரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அதிரடியாக கடந்த வாரம் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமாரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதில், வெளிநாடுகளில் இருந்து விடுதலை புலி அமைப்புகளிடம் பல கோடி ரூபாய் நிதி சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியாமல் பெற்றது தெரியவந்தது. மேலும், நாம் தமிழர் கட்சியை கைப்பற்றி அதன் மூலம், தடை செய்யப்பட்ட விடுதலை புலி அமைப்புகளுடன் இணைந்து தமிழகத்தில் ஆயுதப்புரட்சி செய்ய திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சாட்ைட துரைமுருகன், இசை மதிவாணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று சென்னையில் உள்ள என்ஐஏ மண்டல அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.

அந்த சம்மனை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு யூடியூபர் சாட்டை துரைமுருகன் மற்றும் இசை மதிவாணன் ஆகியோர் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினார். என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பட்ட 2 பேரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அவர்களின் வழக்கறிஞர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. பின்னர் என்ஐஏ அதிகாரிகள் சாட்டை துரைமுருகன் மற்றும் இசை மதிவாணனை தனித்தனியாக விசாரணை நடத்தினர். சாட்டை துரைமுருகனிடம் டெல்லியில் இருந்து வந்த துணை கமிஷனர் ஒருவர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்தினர். நிதி எதற்காக செலவு செய்யப்பட்டது. ஆயுதப்புரட்சிக்கு ஆட்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டனரா, சட்ட விரோத நிதிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ன தொடர்பு, வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு செயலிகளால் வீடியோ கால் மூலம் என்ன பேசப்பட்டது என நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாட்டை துரைமுருகன் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்துள்ளார். பல கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மறுப்பு தெரிவித்த கேள்விக்கான ஆதாரத்தை என்ஐஏ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில் தராமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. மதிய உணவு, 2 முறை தேநீர் கொடுக்கப்பட்டது. விசாரணையின் இடையே 6 முறை சாட்டை துரைமுருகன் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்று வந்தாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணை முடிவில் தான் எத்தனை கோடி நிதி விடுதலைப்புலி அமைப்புகளிடம் இருந்து பெற்றனர். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் எந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டனர் என்பது குறித்து தெரியவரும் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாட்டை துரைமுருகன் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்துள்ளார். பல கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மறுப்பு தெரிவித்த கேள்விக்கான ஆதாரத்தை என்ஐஏ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில் தராமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

The post விடுதலைப்புலிகளிடம் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்ற விவகாரம் யூடியூபர் சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை: வெளிநாட்டு ரகசிய தொடர்புகள், ஆயுத புரட்சி குறித்து சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : NIA ,Chatti Duraimurugan ,LTTE ,CHENNAI ,Chattay Duraimurugan ,Ishai Madhivanan ,Nam Tamilar Party ,Omalur, Salem district… ,YouTuber ,Dinakaran ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....