×

உத்தரகாண்ட் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக அமலாகிறது

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் இச்சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது உத்தரகாண்ட். பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவில், கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், சிவில் சட்டங்கள் மதத்திற்கு மதம் வேறுபடுகிறது. அந்தந்த மதத்திற்கு ஏற்ப திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமை போன்றவை சிவில் விவகாரங்கள் கையாளப்படுகின்றன.

இதை மாற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென பாஜ கட்சி தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக ஒன்றிய பாஜ அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டத்தை அமல்படுத்த மும்முரமாக ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதும், அதன் வாக்குறுதியில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைத்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் தந்ததைத் தொடர்ந்து, பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான 4 நாள் சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தால் இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். போர்ச்சுகீசியர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போது வரை கோவாவில் பொது சிவில் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த மசோதா ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், நாட்டிலேயே முதல் முறையாக உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரகாண்டைத் தொடர்ந்து குஜராத் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்கள் இச்சட்டத்தை கொண்டு வர தயாராக உள்ளன. அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இச்சட்டத்திற்கான மசோதா கொண்டு வரப்படும் என ஏற்கனவே ராஜஸ்தான் மாநில பாஜ அரசு கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* பொது சிவில் சட்ட மசோதா, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவு குறித்த அம்சங்கள் உள்ளன.
* இந்த சட்டம் அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் இது பொருந்தும். பழங்குடியின மக்களுக்கு மட்டும் விலக்கு.
* லிவ்-இன் ஜோடிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.

* வளர்ந்த இந்தியாவுக்கான பங்களிப்பு: புஷ்கர் தாமி
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ‘‘இது சாதாரண சட்டம் அல்ல. அனைத்து மதங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சட்டங்களை உருவாக்கும், பாரபட்சமற்ற மற்றும் பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க உதவும் சட்டமாகும். குறிப்பாக பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டம். இந்த சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். பிரதமர் மோடி தலைமையின் கீழ் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப உத்தரகாண்ட் மாநிலத்தின் சிறிய பங்களிப்பு இது’’ என்றார்.

The post உத்தரகாண்ட் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக அமலாகிறது appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Legislative Assembly ,Dehradun ,Uttarakhand ,India ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ