×

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு 30 பேர் பலி;42 பேர் காயம் : வேட்பாளர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல்

கராச்சி: பாகிஸ்தானில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி அலுவலகங்களில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் பலியானார்கள். 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முழுஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள பலுசிஸ்தானில் வன்முறை வெடித்து உள்ளது.

நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்தல் பிரசார அலுவலகங்கள் மற்றும் பேரணிகள் மீது 10 இடங்களில் கையெறி குண்டு வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், இப்போது வரை அங்கு இதுபோன்று சுமார் 50 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிபி நகரத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் பேரணியை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர். முதல்குண்டுவெடிப்பு பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே நடந்தது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள ஜமியத்-உலேமா இஸ்லாம்-பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலியானார்கள்.

பிஷின் மாவட்டத்தில் முதல்குண்டுவெடிப்பு நடந்த சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் தேர்தல் அலுவலகத்தில் ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச்செய்தது தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளால் பலுசிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு 30 பேர் பலி;42 பேர் காயம் : வேட்பாளர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : KARACHI ,Pakistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா