×

சென்னையில் டிஎன்பிஎல் ஏலம் சாய் கிஷோருக்கு ரூ.22லட்சம்

சென்னை: டிஎன்பிஎல் டி20 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆல்-ரவுண்டர் சாய் கிஷோர் அதிகபட்சமாக ரூ.22 லட்சத்துக்கு திருப்பூர் அணி வாங்கியது.தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 7வது சீசன் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், நெல்லை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், திருச்சி சோழாஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

டிஎன்பிஎல் வரலாற்றில் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு கோவை வாங்கியதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது.இந்நிலையில், பிரபல தொலைகாட்சி வர்ணனையாளர் சாரு சர்மா நடத்திய இந்த ஏலத்தில் யார் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.அதற்கேற்ப, பலத்த போட்டிக்கிடையே தமிழ்நாடு அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான சாய் கிஷோரை ரூ.22 லட்சத்துக்கும், நட்சத்திர வீரர் டி.நடராஜனை ரூ.11.25 லட்சத்துக்கும் திருப்பூர் அணி வாங்கியது. ஹரிஷ் குமார் (ரூ.15.4 லட்சம்), ஆர்.விவேக் (ரூ.11 லட்சம்) சேலம் அணிக்கு ஒப்பந்தமாகினர்.

குஜராத்தைச் சேர்ந்த அபிஷேக் தன்வரை ரூ.12.2 லட்சத்துக்கும், அதிரடி வீரர் ஜி.பெரியசாமியை ரூ.8.8 லட்சத்துக்கும் சேப்பாக்கம் அணி ஏலத்தில் எடுத்தது. சந்தீப் வாரியர் ரூ.10.5 லட்சத்துக்கு திண்டுக்கல் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.சாய் கிஷோர் தான் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்று முடிவான நிலையில், உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சஞ்ஜெய் யாதவை ரூ.22 லட்சத்துக்கு திருச்சி வாங்கியது. மொத்தத்தில் இந்த ஏலத்தின் மூலம் சேலம் 11, திருச்சி, சேப்பாக்கம் தலா 9, கோவை 3, மதுரை 7,நெல்லை, திண்டுக்கல் தலா 6, திருப்பூர் அணி 10 வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஏல நிகழ்ச்சியில் அணி நிர்வாகிகள், நட்சத்திர வீரர்களான அஷ்வின் (திண்டுக்கல்), அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த் (மதுரை) உட்பட பலர் பங்கேற்றனர். ஏலத்துக்கு முன்பாக, டெஸ்ட் போட்டியில் 499 விக்கெட் எடுத்ததற்காக அஷ்வினுக்கு ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.சென்னையில் பைனல்: வழக்கம் போல கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் டிஎன்பிஎல் லீக் ஆட்டங்கள் நடைபெறும். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அடுத்த ஆண்டு மதுரையிலும் டிஎன்பிஎல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று டிஎன்சிஏ நிர்வாகி டாக்டர் பாபா தெரிவித்தார்.

The post சென்னையில் டிஎன்பிஎல் ஏலம் சாய் கிஷோருக்கு ரூ.22லட்சம் appeared first on Dinakaran.

Tags : TNPL ,Chennai ,Sai Kishore ,Sai Kishor ,Tirupur ,TNPL T20 league ,Tamil Nadu Premier League ,TNPL) T20 ,Chepak ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது!