×

சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு: 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டியில் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டியில் புனித செபஸ்தியார் மற்றும் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஊரில் உள்ள ஆலயம் முன்பு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.

இதில், திண்டுக்கல், திருச்சி, மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 650 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முன்னதாக காலையில் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டை கலெக்டர் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து ஊர் வழக்கப்படி முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் காளைகளை அடக்கினர். ஒரு சில காளைகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின.

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடி கொடுக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, வேட்டி, துண்டு, சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினர். ஜல்லிக்கட்டைக் காண சுற்றுப்புற கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக நேற்று இரவு ஆலயம் சார்பில் மின்ரத பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டையொட்டி புகையிலைப்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

The post சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு: 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,festival ,Chanarpatti ,Gopalpatti ,Toukilaipatti ,St. ,Sebastian ,St. Anthony ,Chanarpatti, Dindigul district ,temple festival ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை