×

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்.15ல் தீர்ப்பு.. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ள, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக தேதி நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை துவங்க கூடாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் விடுவிக்கப்படும்பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதிடப்பட்டது.

மேலும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை என்றும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் புகார் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து அமலாக்கத்துறை தரப்பில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை வரும் 15ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.

The post சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்.15ல் தீர்ப்பு.. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai District Primary Sessions Court ,Chennai ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...