×

ஆன்மிகம் பிட்ஸ்: திருஆனைக்காவில் 108 லிங்கங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருஆனைக்காவில் 108 லிங்கங்கள்

திருச்சியை அடுத்த திருவானைக்கா (திருவானைக்காவல்) ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 108 லிங்கங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. அஷ்டகொடி பிராகாரமான வெளிப்பிரகாரத்தின் தெற்குத் திருமாளிகைப் பத்தியில் இந்த 108 லிங்கங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான புராண வரலாறுகள் தெரியவில்லை. இங்குள்ள ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப்பெருமானும் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றை நோக்க, விநாயகர், முருகன், சரஸ்வதி, லட்சுமி முதலிய தெய்வங்கள் அம்பிகை வழிபட்ட சிவபெருமானை வழிபட்டபின் தம் பெயரால் தனியே லிங்கம் அமைத்து வழிபட்டு அந்த லிங்கத்திலேயே அமர்ந்துள்ளனர் என்று எண்ண வேண்டியுள்ளது. (தேவர்களும் கணங்களும் தாம் அமைத்த லிங்கத்துள்ளேயே கலந்து நின்று தியானம் செய்து கொண்டிருக்கின்றார் என்ற கருத்து உள்ளது.

அதன் அடிப்படையில் சகல தேவதைகளும் இங்கு தாம் அமைத்த லிங்கத்தில் அமர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது) இந்த லிங்கங்களை வழிபட்டால் சகல தேவர்களையும் அவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். அஷ்டமிகளிலும் மாத சிவராத்திரிகளிலும் இந்த லிங்கங்களை வழிபடுவோர் அதிகாரம், அரசபோகம் முதலான உயர்ந்த பயனைப் பெறுவர் என்பது உறுதியாகும்.மகாசிவராத்திரி நாளில் இந்த லிங்கங்களுக்குச் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன.

தஞ்சை 108 லிங்கங்கள்

தஞ்சைப் பெரிய கோயிலில் சரபோஜி மன்னர் எடுப்பித்த கன்னிமூலை கணபதிக்குப் பின்புறம் திருமாளிகைப் பத்தியில் 108 சிறிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் சரபோஜி மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வைகளாகும். அவர் வீரசிங்கம்பேட்டையில் இருந்து இந்த லிங்கங்களைக்கொண்டு வந்து நிலைப்படுத்தி, கி.பி. 1801 ஆம் ஆண்டு மார்ச்சு 18ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்து வைத்ததாக மோடி என்னும் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன.

பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மன் கண்டியூருக்குப் பக்கத்தில் நந்திபுரம் என்னும் ஊரை உருவாக்கி, அங்கு 1008 லிங்கங்களைக் கொண்ட சிவாலயத்தினை அமைத்தான். அக்கோயில் நந்தி புரத்து ஆயிரத்தளி என்று அழைக்கப்பட்டது. சோழர் காலம் வரையில் சிறப்புடன் திகழ்ந்த அக்கோயில் காலவெள்ளத்தால் அழிந்துபட்டது. அப்பகுதியும் நரசிங்கன் என்னும் குறுநில மன்னன் பெயரால் வீரநரசிங்கம்பேட்டை என்னும் பெயரைப் பெற்றது. அங்கு அழிந்து பூமிக்குள் போயிருந்த லிங்கங்கள் அவ்வப்போது கிடைத்தன. சரபோஜிமன்னன் அவற்றில் 108 லிங்கங்களை எடுத்து வந்து இங்கே பிரதிஷ்டை செய்ததுடன் அவற்றின் நாள் பூசைக்குத் தேவையான நிபந்தங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

திருவான்மியூரில் 108 லிங்கம்

சென்னை திருவான்மியூர் ஆலயத்தில் அகத்தியர் 108 லிங்கங்களை வழிபட்டுப் பேறு பெற்றதைக் குறிக்கும் வகையில் 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருந்தீசுவரர் ஆலயத்தில் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள முதல் திருச்சுற்றின் வடக்குப்புறம் அமைந்த திருமாளிகைப் பத்தியில் 108 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு பீடத்தில் நடுவில் ஒன்றும், அதன் எண்திக்கிலும் எட்டாக, ஆக ஒன்பது லிங்கங்களைக் கொண்ட 12 தொகுதிகளாக இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த லிங்கங்களின் ஆவுடையார்கள் ஒரே அளவில் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது நர்மதை ஆற்றில் கிடைக்கும் பாண லிங்கங்களை எடுத்து வந்து உருத்திர பாகமாக நிலைப்படுத்தியுள்ளனர். இங்கே 108 பாண லிங்கங்கள் நேர்த்தியான ஆவுடையாருடன் அமைந்திருப்பது வேறெங்கும் காணமுடியாத அற்புதக் காட்சியாகும்.இந்த 108 லிங்கங்களுக்கு அருகில் விசித்திரமான பைரவரைக் காண்கிறோம். இவர் சிருஷ்டி பைரவராக விளங்குகிறார்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

The post ஆன்மிகம் பிட்ஸ்: திருஆனைக்காவில் 108 லிங்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Kunkum Anmigam ,Jambukeshuvarar ,Trichy ,southern tirumalika ,Ashtakodi ,
× RELATED சிறையில் திருநங்கைக்கு பாலியல்...