×

குஜராத்தில் இருந்து பார்சலில் வாங்கி ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை

*பேன்சி கடை ஓனர், சிறுவன் உட்பட 3 பேர் கைது

பவானி : குஜராத் மாநிலத்தில் இருந்து பார்சலில் வாங்கி ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக ரூ.20 லட்சம் மதிப்பு போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, பேன்சி கடை உரிமையாளர், சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வாய்க்கால்மேடு பகுதியில் போதை மாத்திரை பயன்படுத்தியவரை பிடித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஈரோட்டிலிருந்து வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் போலீசார் தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தியபோது, குஜராத்தை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் பார்சல் மூலம் இந்த மாத்திரைகளை ஈரோடு கொங்காலம்மன் கோயில் கிழக்கு வீதியில் பேன்சி கடை நடத்தி வரும் பரத்குமார் (32) வாங்கி ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் தினேஷ்குமார் (33) மூலம் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த மாத்திரைகள் கள்ளத்தனமாக 10 அட்டைகள் கொண்ட ஒரு பெட்டி மாத்திரைகள் ரூ.5 ஆயிரத்து 500க்கும், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத்திரை ரூ.200 வீதம் 10 மாத்திரை கொண்ட அட்டை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கருங்கல்பாளையம் தினேஷ்குமார், பேன்சி கடை உரிமையாளரான ராஜஸ்தானை சேர்ந்த பரத்குமார் மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரம் அட்டைகள் கொண்ட 100 பெட்டிகள் (10 ஆயிரம் மாத்திரைகள்) பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். தொடர்ந்து, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த தினேஷை சித்தோடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் கை நரம்பு வழியாக செலுத்தி, போதை ஏற்படுத்தி கொள்வது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த சித்தோடு போலீசாருக்கு ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவஹர் பாராட்டு தெரிவித்தார்.

The post குஜராத்தில் இருந்து பார்சலில் வாங்கி ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Gujarat ,Pansy ,Bhavani ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு