×

பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் பள்ளி மாணவர்களை வைத்து நூதன முறையில் மணல் கடத்தல்

*சமூக ஆர்வலர்கள் வேதனை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே முனுகப்பட்டு பகுதியில் மாட்டு வண்டியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மூலம் மணல் கடத்தல் தொழிலில் பெற்றோர்கள் ஈடுபட வைப்பதால் அவர்களின் எதிர்காலம் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வழியே செல்லும் செய்யாற்று படுகையில் மாட்டு வண்டி மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதில் முனுகப்பட்டு பகுதியில் செய்யாற்று படுகை மற்றும் கமண்டல நாகநதிபடுகை என இரண்டு ஆற்று படுகைகள் ஒன்றாக கலக்கும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் மணல் வளம் எப்போதும் செழுமையாக காணப்படும். எனவே இப்பகுதியில் மாட்டு வண்டி வைத்திருக்கும் பெரும்பாலானோர் பகல், இரவு நேரங்களில் மணல் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இந்த தொழிலை குடிசைத் தொழிலாகவே செய்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் உள்ள மணல் கடத்தலில் ஈடுபடுவோர் போலீஸ் மற்றும் வருவாய் துறையினரிடமிருந்து தப்பிக்க தங்களது பிள்ளைகளை, அதாவது 10ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பிள்ளைகளை இந்த தொழிலில் ஈடுபட வைத்து வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், பெரணமல்லூர் பகுதியில் முனுகப்பட்டு பகுதி வழியே செல்லும் ஆற்று படுகையில் பகல், இரவு நேரங்களில் தீவிரமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிந்தும் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. குறிப்பாக மணல் கடத்துவோர் தற்போது நூதன முறையை கையாளுகின்றனர். அதாவது அவர்கள் கைதில் இருந்து தப்பிக்க உயர்கல்வி படிக்கும் தங்கள் பிள்ளைகளை இந்த கடத்தலில் ஈடுபட வைக்கின்றனர்.

இதனால் மணல் கடத்தும் பகுதிக்கு வரும் அதிகாரிகள் மாட்டு வண்டிகளை மட்டும் பறிமுதல் செய்து சென்று விடுகிறார்கள். ஒரு சில வாரங்களில் மீண்டும் புது மாட்டு வண்டிகளை வாங்கி தொடர்ந்து மணல் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் உயர்கல்வி படிக்கும் பிள்ளைகளை இது போன்ற தொழில் ஈடுபட வைப்பதால் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் வேறொரு பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்த வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர். எனவே படிக்கும் வயதுடைய குழந்தைகளை மணல் கடத்தலில் ஈடுபட வைக்கும் பெற்றோர்களை சம்பந்தப்பட்ட துறையினர் நேரடியாக அழைத்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என அப்போது கூறினர்.

The post பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் பள்ளி மாணவர்களை வைத்து நூதன முறையில் மணல் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Munukapattu ,Anguish ,Munugapattu ,Thiruvannamalai district ,Dinakaran ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...