×

மேட்டுப்பாளையத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீண்

 

மேட்டுப்பாளையம், பிப்.7: மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு குத்தாரிபாளையம் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 11.5 எம்எல்டி தண்ணீர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அன்னூர் அடுத்துள்ள நரியம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பம்ப் ஹவுஸ் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பின்னர் திருப்பூர், அவிநாசி ஒன்றியங்களில் வசிக்கும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த 708 கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பூர், அவிநாசி ஒன்றியங்களில் உள்ள மக்களின் குடிநீர் பற்றாக்குறை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்ட பணிகள் தற்போது முடிவுற்று சோதனை ஓட்டமானது நடைபெற்று வருகிறது. குத்தாரிபாளையத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படும் ராட்சத குடிநீர் குழாய் நீலிபாளையம் சாலையில் உள்ள பாலத்தை ஒட்டி செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை இந்த பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல அடி உயரத்திற்கு மேலாக தண்ணீர் எழும்பியது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக அங்கிருந்த குட்டையில் கலந்தது. இதுகுறித்து அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பவானி ஆற்றில் இருந்து திருப்பூர், அவிநாசி ஒன்றியங்களில் உள்ள மக்களுக்காக 708 கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு உடனடியாக சீரமைக்கப்பட்டது. இந்த திட்டத்தினை வரும் 11ம் தேதி தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தினால் திருப்பூர், அவிநாசி ஒன்றியங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்’’ என்று தெரிவித்தனர்.

The post மேட்டுப்பாளையத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீண் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Bhavani river ,Alangombu Guttaripalayam ,Nariampalli ,Annur ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது