*30 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் சாமண்ணா நீருந்து நிலையம் அருகே பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பின்னர் அந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு குழாய்கள் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர், அந்த தொட்டிகளில் இருந்து வீடுகள் தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாமண்ணா நீருந்து நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் உடைப்பு பெரிதாகி அங்கே அடைக்கப்பட்டிருந்த வால்வு தூக்கி வீசப்பட்டுள்ளது. பின், குழாயில் இருந்து வெளியேறிய நீர் சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து சென்ற நகராட்சி ஊழியர்கள் பிரதான குழாய்க்கு அனுப்பப்படும் நீரை நிறுத்தி விட்டு உடைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து குடிநீர் வால்வு மாற்றப்பட்ட பின்னர் குடிநீர் விநியோகம் துவங்கியது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீரில் சுத்தம் செய்த வாகன ஓட்டிகள்
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வாகனங்களில் சத்தியமூர்த்தி நகர் வழியே சென்றனர். அப்போது, குழாய் உடைப்பால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தண்ணீரில் சுத்தம் செய்து சென்றனர்.
The post மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் பிரதான குடிநீர் குழாய் திடீர் உடைப்பு appeared first on Dinakaran.