×

கொளுத்தும் வெயில் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிடும் ஜாக்கிரதை: தீயணைப்புத்துறை எச்சரிக்கை

 

சிவகாசி, பிப்.7: வெயில் கொளுத்துவதால் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விடும் அபாயம் இருப்பதாக தீயணைப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர். சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வெயில் காலங்களில் விஷ பூச்சிகள் நிழல் தேடி வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயம் இருப்பதாக தீயணைப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறியதாவது:

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது. எனவே, நீண்ட நேரம் ஜன்னல்களை திறந்து வைக்கக் கூடாது. நாகபாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும் இயல்புடையது. மாலை நேரங்களில் வீட்டின் முன் மற்றும் பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஊர்ந்து வரும் தன்மையுள்ள விஷ ஜந்துக்கள் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலேயே வீட்டிற்குள் நுழையும் அபாயம் உள்ளது.

குளிர்ச்சியான நிழல் உள்ள மரத்தின் கீழ் உட்காருவதற்கு முன் கிளைகளின் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றிலும் பரிசோதிக்க வேண்டும். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். வீட்டிற்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களை போட்டும் தூங்கும் பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

மாலை நேரங்களில்தான் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் நடமாட்டம் இருக்கும். பாம்புகள் மட்டுமின்றி பூரான், தேள், நட்டுவாக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவு நேரங்களில்தான் நடமாடும். வீடுகளை சுற்றி உள்ள புதர்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post கொளுத்தும் வெயில் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிடும் ஜாக்கிரதை: தீயணைப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை