×

தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு நாளை தொடக்கம்: சென்னை வர்த்தக மையத்தில் 3 நாள் நடக்கிறது

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதற்காக பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 8ம் தேதி (நாளை) முதல் 3 நாள் நடத்தப்பட உள்ளது. கலைஞர் தலைமையில் 1999-ல் ‘தமிழிணையம்99’ மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டை முன்னெடுக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மொழியியல் அறிஞர்களும், கூகுள், மைக்ரோசாஃப்ட், லிங்க்ட்இன், டெக் மகேந்திரா, கிமி சிங்கப்பூர், ஸோஹோ உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் இம்மாநாட்டில் பங்குகொள்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் 50க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40 க்கும் மேற்பட்ட அமர்வுகள் மற்றும் குழு விவாதங்களும் இடம்பெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட 35க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் வாசிக்கப்பட உள்ளன. மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக 40 காட்சி அரங்குகள் இடம்பெறும். தொழில்நுட்ப தளத்தில் உலகத் தரத்திற்கு தமிழை உயர்த்தும் ஒரு முயற்சியான இம்மாநாட்டுக்கென பிரத்யேக இலச்சினை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு நாளை தொடக்கம்: சென்னை வர்த்தக மையத்தில் 3 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu International Computer Tamil Conference ,Chennai Trade Centre ,Chennai ,Tamil Nadu Government ,International Computer Tamil Conference ,Nandambakkam Trade Center ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...