×

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வீட்டு பணிப் பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான இருவரும் கடந்த 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

The post வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : MLA ,CHENNAI ,Pallavaram ,Pallavaram Constituency ,Karunanidhi ,Ando Mathivanan ,Marlina ,Dinakaran ,
× RELATED தேர்தல் பரப்புரையில் அதிமுக கோஷ்டி...