×

எண்ணூரில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு கோரமண்டல் ஆலையின் கவனக்குறைவே காரணம்: மாசுகட்டுப்பாடு வாரியம் திட்டவட்டம்

சென்னை : எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பா டு வாரியம், தமிழக அரசு சார்பில் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக மாசு கட்டுப்பா டு வாரிய வழக்கறிஞர் வாதிடுகையில் புயல் முடிந்த பிறகு கோரமண்டல் தொழிற்சாலை அதிகாரிகள் குழாயை முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனால் ஏற்பட்டது தான் இந்த விபத்து. இதற்கு முழு காரணம் அந்த கோரமண்டல் தொழிற்சாலையின் கவனக்குறைவு தான். அவர்கள் புயலுக்கு பின் முறையாக ஆய்வு செய்து இருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம். மொத்தம் 67.638 டன் அமோனியா வாயு வெளியேறி உள்ளது.

இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற சூழல், கடல் சூழல் என அனைத்தும் பாதிப்படைந்து உள்ளது. இதனால் ஒரு கிலோ அமோனியா வெளியேறியதற்கு ரூ.876 என்ற இழப்பீடு கணக்குப்படி மொத்தம் ரூ.5,92,50,888 கோரமண்டல் தொழிற்சாலை வழங்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்று நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அந்த தொழிற்சாலை எடுக்க வேண்டும். கடவுளின் செயல் என்று அந்த நிறுவனம் சொல்வது பொய்யானது. முறையாக அவர்கள் பரிசோதனை செய்து இருந்தால் இது போன்று நடந்து இருக்காது.

எனவே இந்த அமோனியா வாயு கசிவுக்கு முழு காரணம் கோரமண்டல் தொழிற்சாலை தான்” என கூறினார். தொடர்ந்து கோரமண்டல் தொழிற்சாலை தரப்பினர், இந்த வாயு கசிவு என்பது தவறுதலாக ஏற்பட்டது. அது கடவுளின் செயல் என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர்கள், இந்த அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதற்கு காரணம் கோரமண்டல் தொழிற்சாலை என்று தெரிகிறது, இருப்பினும் எதனால் அந்த கசிவு ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்ற விரிவான அறிக்கையை கோரமண்டல் தொழிற்சாலை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post எண்ணூரில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு கோரமண்டல் ஆலையின் கவனக்குறைவே காரணம்: மாசுகட்டுப்பாடு வாரியம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Ennore ,Coromandel ,Board ,Chennai ,Judge ,Pushpa Sathyanarayana ,South Zone National Green Tribunal ,Satya Gopal ,Periyakuppam ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது