×

ஆத்தூர் அருகே நள்ளிரவு பரபரப்பு இருதரப்பினர் பயங்கர மோதல்: 11 பேர் கைது

நரசிங்கபுரம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள கல்பகனூரைச் சேர்ந்த ஒரு சமூகத்தின் இளைஞர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சமூகம் குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அந்த சமூகத்தின் இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அங்குள்ள மாரியம்மன் கோயில் திடல் அருகே திரண்டனர். அதை பார்த்த மற்றொரு சமூக இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கல்வீசியதில் பலரும் காயமடைந்து ஓட்டம் பிடித்தனர். ஊருக்குள் இருந்து 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது. தகவலறிந்து வந்த போலீசார், மோதலை கட்டுப்படுத்தினர். அப்போது போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டது. இதில், வீரகனூர் போலீஸ் ஏட்டு முருகவேல் (43) மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார்.

இரு தரப்பிலும் பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மோதல் நடந்த இடத்திற்கு சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் நள்ளிரவில் வந்து நேரடி விசாரணை நடத்தினார். அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலுக்கு காரணமான சமூகவலைதள இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெற்றிசெல்வன் என்பவரின் தூண்டுதலில் பதிவிட்டது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்வீச்சில் படுகாயமடைந்த ஏட்டு முருகவேல் புகாரின் பேரில், 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். விஏஓ சரவணன் கொடுத்த புகாரின் பேரில், மோதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இம்மோதல் தொடர்பாக ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷ் தலைமையில் தனியாக விசாரணை நடக்கிறது.

 

The post ஆத்தூர் அருகே நள்ளிரவு பரபரப்பு இருதரப்பினர் பயங்கர மோதல்: 11 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Attur ,Narasinghapuram ,Kalpaganur ,Salem district ,Mariamman ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை