×

குடியாதத்ததில் அண்ணாமலை நடைபயணம் நகைக்கடை அதிபர்களிடம் ரூ.20 லட்சம் பாஜவினர் வசூல்: பங்கு பிரிப்பது மோதலால் சமூக வலைதளங்களில் பதிவு

குடியாத்தம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் நகரத்தில் நடைபயணம் மேற்கொள்ள வந்தார். இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் நகர பாஜவினர் செய்திருந்தனர். குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையில் நடை பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் ராட்சத பேனர் மற்றும் கொடிகளுடன் கம்பங்கள் நடப்பட்டது. இந்நிலையில், குடியாத்தம் நகர பாஜகவினர், அண்ணாமலை நடை பயணம் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ரூ.20 லட்சம் வரை நன்கொடையாக பெற்றுள்ளார்களாம். அதற்கு பதிலாக அண்ணாமலை நடைபயணத்தில் அவர் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுப்பதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

ஆனால் நடைபயணம் மேற்கொள்ளாமல் பிரசார வாகனத்தில் அண்ணாமலை சென்று விட்டதால் நன்கொடையாளர்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் பாஜ நகர நிர்வாகிகள், நகர தலைவர் சாய் ஆனந்தனிடம் வசூல் செய்த நன்கொடை தொகையை பிரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் மாவட்டம், மாநில நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவினர் வாட்ஸ் அப் குழு மற்றும் முகநூலில் பணம் வசூல் செய்தது சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு செய்து வருகின்றனர். நகைக்கடை அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது கட்சியினர் மூலமே அம்பலமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக தலைமை விசாரணை நடத்தி வருகிறது.

 

The post குடியாதத்ததில் அண்ணாமலை நடைபயணம் நகைக்கடை அதிபர்களிடம் ரூ.20 லட்சம் பாஜவினர் வசூல்: பங்கு பிரிப்பது மோதலால் சமூக வலைதளங்களில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Gudiyattam ,president ,Kudiattam ,Kudiatham Netaji ,Kudiatham ,
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...