×

பெருங்குடியில் அரிஹந்த் கட்டுமான நிறுவனம் 4 மாடி கட்ட தோண்டிய பள்ளத்தால் 5 வீடுகள் இடிந்தன: மேலும் பல வீடுகளில் விரிசல்

சென்னை: பெருங்குடியில் தனியார் கட்டுமான நிறுவனம் 4 மாடி கட்டிடம் கட்ட தோண்டிய 15 அடி பள்ளத்தால் பக்கத்தில் உள்ள 5 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருங்குடி பர்மா காலனி, திருவள்ளுவர் நகர், 10வது தெருவில் அரிஹந்த் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்குமாடி கட்டிடத்திற்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பொக்லைன் மூலம் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வருகின்றனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டு நேற்று அதிகாலை 5 வீடுகளின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வீடுகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. மேலும், பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவர் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்த நிலையில் வீடு விரிசல் விழுந்ததை பார்த்து அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியே வர செய்துள்ளார். உடனடியாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் உயிர் சேதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். மேலும், முடிந்த அளவிற்கு வீட்டில் இருந்த பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வந்து சாலையில் வைத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டமக்கள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி தகவலறிந்த சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிப்பு குறித்து கணக்கிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: இந்த குடியிருப்புகளின் அருகில் பள்ளம் தோண்ட துவங்கிய நாள் முதல் அருகில் உள்ள எங்களது வீடுகள் விரிசல் விட ஆரம்பித்தன. இதுகுறித்து பலமுறை நாங்கள் ஒன்று சேர்ந்து அந்த நிறுவனத்திடம் முறையிட்டும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அலட்சியம் காட்டும் வகையில் தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முனியப்பன் என்பவர் எங்களை எழுப்பவில்லை என்றால் நாங்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து இருப்போம். இப்போது குழந்தைகளுடன் உணவு சமைக்க, உறங்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கி, வாடகை வீட்டை தேடி வருகிறோம். இடிந்த வீடுகளை பாதிப்புக்கு காரணமான நிறுவனமோ அல்லது அரசோ மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post பெருங்குடியில் அரிஹந்த் கட்டுமான நிறுவனம் 4 மாடி கட்ட தோண்டிய பள்ளத்தால் 5 வீடுகள் இடிந்தன: மேலும் பல வீடுகளில் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Arihant Construction Company ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை பெருங்குடியில் லாரி மோதி...