×

வீரராகவப் பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் 3ம் நாள் விழாவில் கருட சேவை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று கருட சேவை மற்றும் கோபுர‌ தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி முதல் நாளான 4ம் தேதி அதிகாலை கொடியேற்றமும், காலை தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 2ம் நாளான நேற்று முன்தினம் காலையில் உற்சவர் ஹம்ச வாகன அலங்காரத்திலும், மாலையில் வீதி புறப்பாட்டிலும், இரவில் சூரியபிரபை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் 3ம் நாளான நேற்று அதிகாலையில் கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உற்சவர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பாளர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

The post வீரராகவப் பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் 3ம் நாள் விழாவில் கருட சேவை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Garuda Seva ,Thai Brahmotsavam ,Veeraragava Perumal Temple ,Thiruvallur ,Gopura Darshan ,Thai month Pramotsava festival ,Sri Vaithiya Veeraragava Perumal Temple ,Sami ,
× RELATED திருவள்ளூர்  வைத்திய வீரராகவர்...