×

சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல்: 200க்கும் மேற்பட்டோர் கைது

பொன்னேரி: சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய முக்கிய சாலைகளில் ஒன்று சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையாகும். சென்னையில் இருந்து மாதவரம், செங்குன்றம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திராவிற்குச் செல்லும் சாலை இது. சென்னை மாதவரம் முதல் ஆந்திர மாநிலம் தடா வரையில் 43 கி.மீ தூரமுள்ள இந்த சாலையை புனரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த சாலை வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம் செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கிறது.

2009ம் ஆண்டு மாதவரம் முதல் தடா வரையில் 6 வழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்ட நிலையில், முழுமையாக 6 வழிச்சாலை முடிவடையாமல் அவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று கட்சியினர் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 25 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

அப்போது ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு 6 வழி சாலை திட்டத்தை அறிவித்தது. இன்னும் முழுமையாக பணிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆறு வழிச்சாலை என அறிவித்துவிட்ட பிறகு, ஆறு வழிச்சாலை பணிகளை முடிக்காமல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. குறிப்பாக மாதவரம் முதல் நல்லூர் வரையில் நான்கு வழி சாலையாகத்தான் இருக்கிறது. நான்கு வழிச்சாலையை அமைத்துவிட்டு எப்படி 6 வழிச்சாலைக்கான கட்டணத்தை வசூலிக்க முடியும். இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கண்டெய்னர் லாரிகள் என அனைத்துக்கும், சாலையில் செல்ல ஏற்கனவே வரி செலுத்துகிறோம். அதற்கும் மேலாக சுங்கச்சாவடியில் வசூல் செய்கிறார்கள்.

6 வழிச்சாலை அமைப்பதின் நோக்கமே, வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல வேண்டும் என்பதற்குத்தான். ஆனால், நான்கு வழிச்சாலை தான் தற்போது வரை உள்ளது. ஆறு வழி சாலையில் உள்ள மேம்பாலங்கள் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், ஆறு வழிச்சாலை அமைத்தால் சுங்கச்சாவடியில் 24 கவுன்டர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் வாகனங்கள் வந்தால் உடனடியாக சுங்கச் சாவடியை விரைந்து கடந்து செல்ல முடியும். 10 நிமிடத்திற்கு மேலாக வாகனங்கள் நின்றால் கட்டணம் வசூலிக்கக் கூடாது. எல்லா விதிமுறைகளையும் இவர்கள் மீறுகிறார்கள். நான்கு வழிச்சாலையாக இருக்கிறபோது, 43 கிலோ மீட்டரில் ஆங்காங்கே உள்ள மேம்பாலங்களை கட்டாத வரையில், இந்த சுங்கச்சாவடி செயல்பட அனுமதிக்க கூடாது.

அனைத்து வகையிலும் சட்ட விரோதமாக செயல்படும் சுங்கச்சாவடியை மூடும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். இந்நிலையில், கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்டச் செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன், துளசிநாராயணன், சம்பத், சந்தானம், மோகனா, சி.பெருமாள், தமிழ்அரசு, வட்டச் செயலாளர்கள் எல்லையன், கண்ணன், ராஜேந்திரன், சேகர், ஜெயவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல்: 200க்கும் மேற்பட்டோர் கைது appeared first on Dinakaran.

Tags : Marxist ,Communist ,Ponneri ,Chennai ,Kolkata National Highway ,Andhra ,Madhavaram ,Senggunram ,Thachur ,Kummidipoondi ,Arambakkam ,Marxist Communist ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு