×

நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் குளத்தை பதிவு செய்த சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்: அரசின் மின்னல்வேக நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் இருந்து வைகுண்டம் செல்லும் வழியில் கிருஷ்ணாபுரம் உள்ளது. அருகில் பாப்பா குளம், சிவலார் குளம் ஆகிய 2 குளங்கள் உள்ளன. ஒவ்வொரு குளமும் 100 ஏக்கர் பரபரப்பளவு கொண்டது. இந்த 2 குளத்தையும் நெல்லையைச் சேர்ந்த ரெங்க நாச்சியார் என்பவருக்கு முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை டிஐஜி செந்தமிழ்செல்வனுக்கு பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தியதில், நெல்லையில் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் முன் ஆவணம் இல்லாமல் குளத்தை பதிவு செய்தது உறுதியானது.

மேலும், பாப்பா குளம், சிவலார் குளம் உள்ள பகுதியில் தற்போதைய மதிப்பு சென்ட் 2 லட்சம் ரூபாய். அதன்படி பார்த்தால் 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.400 கோடியாகும். இந்தநிலத்தை ரெங்கநாச்சியார் பெயரில் சார் பதிவாளர் குமரேசன் பதிவு செய்து கொடுத்துள்ளார். அதில் ரெங்கநாச்சியாருக்கும், அவரது சகோதரர் பட்சிராஜன் என்பவருக்கும் இடையே தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக பதிவுத்துறைக்கான லோக் அதாலத்தில் இருவரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து லோக் அதாலத் கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகிவிட்டோம் என்றும், அதன்படி குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட நிலங்கள் யார் யாருக்கு சொந்தம் என்று இருவரும் மனு செய்தனர். அந்த மனுவில் தங்களது சொத்து சர்வே எண்ணுடன் சேர்த்து பாப்பாகுளம், சிவலார் குளத்தின் சர்வே எண்ணையும் இணைத்து ரெங்கநாச்சியாருக்கு சொந்தம் என்று குறிப்பிட்டனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட லோக் அதாலத், அந்த மனுவின் அடிப்படையில், குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்கள் அனைத்தும் ரெங்கநாச்சியாருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 2 குளத்தின் சர்வே எண்ணும் சேர்க்கப்பட்டிருந்தது. லோக் அதாலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஆவணங்களை வைத்து முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் குமரேசன், ரெங்கநாச்சியாருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளர். பதிவு செய்யும்போது முன் ஆவணத்தை சரிபார்க்கவில்லை. அதோடு, குளத்தின் சர்வே எண், தற்போதும் அரசு புறம்போக்கு குளம் என்று கூறப்பட்டுள்ளது. அதையும் அவர் சரிபார்க்கவில்லை. இதனால் அரசு குளத்தை தனியாருக்கு பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்த அறிக்கையை டிஐஜி செந்தமிழ்செல்வன், பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு குளத்தை பதிவு செய்த அப்போதைய முறப்பநாடு சார்பதிவாளரும், தற்போது சேரன்மகாதேவியில் பணியாற்றி வருபவருமான குமரேசனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு மீது, தமிழக அரசுக்கு தெரியவந்தவுடன் 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, இதுபோன்று அரசு நிலங்களை பதிவு செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கையாக அமையும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

The post நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் குளத்தை பதிவு செய்த சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்: அரசின் மின்னல்வேக நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nellai ,CHENNAI ,AIADMK ,Krishnapuram ,Vaikundam ,Papa Pond ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...