×

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் மக்களவையில் திமுக கடும் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக திமுக எம்பிக்கள் மக்களவையில் நேற்று குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து, திமுக, பாஜ எம்பிக்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. அவையை நடத்த விடாமல் பாஜ எம்பிக்கள் அமளி செய்ததைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை கொட்டி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதே போல, நெல்லை, தூத்துக்குடியிலும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்புகளுக்கு போதிய நிவாரண நிதியை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை. டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஒரு பைசா கூட தரப்படவில்லை. இந்நிலையில், மக்களவையில் நேற்று இந்த விவகாரத்தை திமுக எம்பிக்கள் எழுப்பினர். கேள்வி நேரத்தின் போது, எம்பி ஆ.ராசா பேசுகையில், ‘‘பாஜ ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தருவதில்லை.

வெள்ள நிவாரணம் வழங்கும் விஷயத்திலும் தமிழ்நாட்டை மாற்றந்தாய் மனப்பான்மையுடனே ஒன்றிய பாஜ அரசு நடத்துகிறது. தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி கோரியுள்ளது. ஆனால், இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேள்வி எழுப்பியும் ஒன்றிய அரசு பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கிறது’’ என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘‘எந்த இயற்கை பேரிடரின் போதிலும், மாநில அரசுகளின் தேவை குறித்து பிரதமர் மோடி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இப்போதுகூட மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பின் கீழ் உள்ள ரூ.2013 கோடியை தமிழ்நாடு அரசு தாராளமாக வெள்ள நிவாரணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பேரிடர் பாதிப்பின் போது மாநில அரசுகளின் கோரிக்கை வருவதற்கு முன்பே ஒன்றிய குழு அனுப்பப்படுகிறது. தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு 2014-24ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.1,98,173 கோடி வழங்கி உள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளை விட 3 மடங்கு அதிகம்’’ என்றார்.

அப்போது துணைக் கேள்வி எழுப்பிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ‘‘தமிழ்நாட்டிற்கு போதுமான வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராமல் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அதோடு, கனமழை குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்வதிலும் தவறி இருக்கிறது’’ என பேசியபடி இருந்தார். அவரை பேசவிடாமல் குறுக்கிட்ட ஒன்றிய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் எழுந்து, ‘‘சம்மந்தமே இல்லாத கேள்வியை டி.ஆர்.பாலு முன்வைக்கிறார்’’ என்றார். அவரை அமைதி காக்கும்படியும், இருக்கையில் அமருமாறும் டி.ஆர்.பாலு கூறினார். அமைச்சர் எல்.முருகன் கேட்காததால், டி.ஆர்.பாலு, ‘‘நீங்கள் எதற்காக குறுக்கிடுகிறீர்கள். உங்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. தயவுசெய்து அமருங்கள்.

நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தகுதியில்லாதவர்’’ என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜ எம்பிக்கள் அவையில் கடும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். தலித் அமைச்சரை அவமதித்ததற்காக டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் பாஜ எம்பிக்கள் கோஷமிட்டு அவையை நடத்த விடாமல் அமளி செய்தனர். இதனால், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பாஜ எம்பிக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு பேசிய வார்த்தைகளில் சில அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்தார். இந்த விவகாரம் மக்களவையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் மக்களவையில் திமுக கடும் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Bias ,Tamil Nadu ,DMK ,Lok Sabha ,Congress ,New Delhi ,Union government ,BJP ,House ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...